சுடச்சுட

  

  கிராமப்புறங்களில் தடையில்லாத மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு  ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.
  ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அம்மையகரம் ஏ.கே.ஆர். ரவிச்சந்தர், தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ் உள்ளிட்டோர் அளித்த மனு:
  காவிரி நீர் வராத நிலையில் ஆழ்குழாய் மோட்டார் மூலம் குறுவை சாகுபடி செய்யப்படுகிறது. திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, பூதலூர் பகுதிகளில் நடவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜூன் 22-ம் தேதி முதல் ஊரகப் பகுதியில் மூன்று மணி நேரத்துக்கு ஒரு மணிநேரம் வீதம் மின்சாரம் முழுமையாக நிறுத்தப்படுகிறது. இந்த அறிவிக்கப்படாத மின்வெட்டால் குறுவை பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை நிலவுகிறது. நாற்றும் பறிக்க முடியாததுடன், உழுத வயலும் காய்ந்து நடவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், குறைந்த மின் அழுத்தம் வருவதால் மோட்டாரை இயக்க முடியவில்லை. எனவே, தமிழக முதல்வர் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை அறிவித்து, 12 மணிநேரத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்க உத்தரவாதம் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.சிஐடியு மாவட்டச் செயலர் சி. ஜெயபால், துணைச் செயலர் கே. அன்பு உள்ளிட்டோர் தலைமையில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சுமார் 100 பேர் அளித்த மனு:
  பூதலூர், திருவையாறு வட்டங்களில் ஆயிரத்துக்கும் அதிகமான மாட்டு வண்டி தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு திருச்சென்னம்பூண்டி, புனல்வாசலில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ள அனுமதி கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
  ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை தமிழ்நாடு கொசு ஒழிப்பு களப்பணியாளர்கள் நலச் சங்கத்தினர் அளித்த மனு:
  தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொசுப்புழு ஒழிப்புப் பணியில் 10 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறோம். ஒவ்வொரு ஒன்றியத்திலும் 20 பேர் வீதம் ஊரக வளர்ச்சித் துறை மூலம் பணியாற்றுகிறோம். மிகக் குறைவாக ரூ. 310 தினக் கூலி வழங்கப்படுகிறது. பேருந்துக் கட்டணமே நாளொன்றுக்கு ரூ. 50 செலவாகிறது. எனவே, இப்போதைய விலைவாசிக்கு ஏற்றவாறு இந்த ஊதியம் கட்டுப்படியாகவில்லை. எனவே, தினக்கூலியை குறைந்தபட்சம் ரூ. 500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai