இந்திய கலாசாரத்தை வளர்ப்பதன் மூலம் உலக நாடுகளுக்கு அமைதி கிடைக்கும்: காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேச்சு

இந்திய கலாசாரத்தை வளர்ப்பதன் மூலம் உலக நாடுகளுக்கு அமைதி கிடைக்கும் என்றார் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

இந்திய கலாசாரத்தை வளர்ப்பதன் மூலம் உலக நாடுகளுக்கு அமைதி கிடைக்கும் என்றார் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
தஞ்சாவூரில் உள்ள தென்னகப் பண்பாட்டு மையத்தில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற சாதனா என்கிற இளைஞர் மேம்பாட்டுத் திட்டத் தொடக்க விழா, வேத, சாஸ்திர, கலை, கலாசார பாரம்பரியம் பற்றிய சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியது:
இந்தியா முழுவதும் ஒரே கலாசாரம் பின்பற்றப்படுகிறது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒரே கலாசாரம் காலங்காலமாய் இருந்து வருகிறது. புரிந்து கொள்ளும் தன்மை, ஆர்வம், சேர்ந்து பணியாற்றக்கூடிய பக்குவம்,  நல்ல மனது ஆகியவை இருந்தால் இக்கலாசாரம் வளர்ச்சி பெறும்.
உயர்ந்த மனநிலையுடன்,  தனிமனித விருப்பு, வெறுப்பு இன்றி இக்கலாசாரத்தை பாதுகாக்கக்கூடிய அக்கறை கொள்ள வேண்டும். பழங்காலத்திலிருந்து கடைப்பிடிக்கப்படும் 64 கலைகளையும் காக்க வேண்டும். இதேபோல, கலைஞர்களையும் போற்ற வேண்டும்.  கலாசாரத்தில் கலையும் ஒன்று. இந்திய கலாசாரம் இந்தியாவையும் கடந்து கம்போடியா, வியத்நாம் உள்ளிட்ட நாடுகளிலும் பரவி இருக்கிறது. சாஸ்திரங்களை பரப்பிய பெருமை தென்னாட்டுக்கு உரியது. சுமத்ரா, ஜாவா, வியத்நாம் உள்ளிட்ட நாடுகளில் இந்திய கலாசாரம் பல தேசங்கள், மொழிகளைக் கடந்தும் இருந்தது. அந்நாடுகளில் தற்போதும் கலாசார நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இந்திய கலாசாரத்தில் கட்டடக்கலை, இசை, கைத்தொழில்கள், நாட்டியம், யோகம், இலக்கியம், பாட்டு உள்ளிட்டவையும் உள்ளன. இந்திய கலாசாரத்தின் முக்கியத்துவத்தைத் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். 
இவையெல்லாம் பழைமை என்றும், இன்றைய காலகட்டத்துக்குப் பயன்படுமா என்ற சந்தேகத்திலும் இதை விட்டுவிட்டனர். இப்போது, ஆர்வத்துடன் தேடத் தொடங்கியிருப்பது நல்ல அறிகுறி. இக்கலாசாரத்தை பாதுகாப்பதன் மூலம் மக்களைப் பாதுகாக்க முடியும். மேலைநாடுகளில் நல்ல எண்ணங்கள் உருவாகும். இந்திய கலாசாரத்தை வளர்ப்பதன் மூலம் இந்தியாவுக்கு நல்லது. 
உலக நாடுகளுக்கும் அமைதி கிடைக்கும். இந்திய கலாசாரத்தை பாதுகாக்கும் செயல், பரம்பரைக்கும் செய்யக்கூடிய உதவியாக இருக்கும். கலாசாரத்தை காப்பாற்றினால், இந்திய நாடு முன்னேற்றமடையும் என்றார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். 
இந்நிகழ்ச்சியில் தென்னகப் பண்பாட்டு மைய இயக்குநர் எம். பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com