குறைதீர் நாள் கூட்டத்தில் திடீர் போராட்டங்கள்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க வந்த மக்கள் திடீர் போராட்டங்களில் ஈடுபட்டனர். 
பேராவூரணி அருகேயுள்ள காளகம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (48). தனது 3 பெண் குழந்தைகளுடன் ஆட்சியரகத்துக்கு திங்கள்கிழமை வந்த இவர் திடீரென தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஐந்து ஏக்கரில் தென்னை சாகுபடி செய்து வந்தேன். கஜா புயலின்போது அனைத்து மரங்களும் சாய்ந்துவிட்டன. இதுதொடர்பாக நிவாரணம் வழங்கக் கோரி அரசு அலுவலர்களிடம் 20 முறை மனு அளித்தேன். ஒவ்வொரு முறையும் மனு அளிக்கும்போது 2 அல்லது 3 நாட்களில் நிவாரணம் வழங்குவதாக அலுவலர்கள் கூறுவர். ஆனால், 7 மாதங்களாகியும் நிவாரணம் கிடைக்கவில்லை. அதனால், இப்போராட்டத்தில் ஈடுபட்டேன் என்றார் ரவிச்சந்திரன்.இவரை போலீஸார் சமாதானப்படுத்தி ஆட்சியரிடம் அழைத்து சென்று முறையிட வைத்தனர்.
தூக்குக் கயிறுடன்...: தமிழ்நாடு ஆதிதிராவிடர் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் சதா. சிவக்குமார் தலைமையில் 50-க்கும் அதிகமான துப்புரவு பணியாளர்கள் தூக்குக் கயிறுடன் வந்தனர். மேலும், தங்களது கழுத்தில் மாட்டிக் கொண்டு முழக்கங்கள் எழுப்பினர். இதுகுறித்து சதா. சிவக்குமார் கூறுகையில், பட்டுக்கோட்டை நகராட்சியில் ஏராளமான துப்புரவு பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். தற்போது நகராட்சியில் துப்புரவு பணியை ஒப்பந்தம் மூலம் தனியாருக்குத் தாரை வார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் துப்புரவு பணியாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலை நிலவுகிறது. எனவே இந்த முடிவை பட்டுக்கோட்டை நகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும் என்றார் அவர். பின்னர், ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
 காத்திருப்பு போராட்டம்: ஒரத்தநாட்டைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். காவிரி சமவெளி பாதுகாப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரான இவர் தனது மகள்களான தமிழ், தீபா, செங்கொடி ஆகியோருடன் ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை திடீர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து ஜெய்சங்கர் கூறுகையில், எனது மகள்கள் தமிழ், தீபா ஒரத்தநாட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். பள்ளி நிர்வாகம் முதலில் கேட்ட கட்டணத்தைச் செலுத்திவிட்டேன். தற்போது கூடுதலாகக் கட்டணம் கேட்கின்றனர். இதனால், எனது மகள்களை வேறு பள்ளியில் சேர்க்க முடிவு செய்து மாற்று சான்றிதழைக் கேட்டேன். ஆனால், பள்ளி நிர்வாகத்தினர் சான்றிதழைத் தர மறுக்கின்றனர். இதுகுறித்து கல்வி அலுவலர்களிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் எனது மகள்களுடன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன் என்றார் அவர். பின்னர், இவரை போலீஸார் ஆட்சியரிடம் அழைத்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com