குடிநீர் பணியை நிறைவேற்ற வலியுறுத்தி இந்திய கம்யூ. கட்சியினர் 12 இடங்களில் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 03rd July 2019 08:57 AM | Last Updated : 03rd July 2019 08:57 AM | அ+அ அ- |

குடிநீர் தரும் தலையாய பணியை நிறைவேற்ற கோரியும், மழைக்கு முன் நீர்நிலைகளைத் தூர்வார வலியுறுத்தியும், குடிமராமத்து பணிகளை நடைமுறைப்படுத்துவதற்குக் கண்காணிப்புக் குழுவை அமைக்க கோரியும் தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 12 இடங்களில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன் கட்சியின் மாநகரக் குழு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநகரச் செயலாளர் பி. கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலப் பொருளாளர் சி. சந்திரகுமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டப் பொருளாளர் ந. பாலசுப்பிரமணியன், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் ஜி. கிருஷ்ணன், வங்கி ஊழியர் சங்க மாவட்டச் செயலர் கே. அன்பழகன், ம. விஜயலட்சுமி, சி. செந்தூர்நாதன், வெ. சேவையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தஞ்சை ஒன்றியம் சார்பில் ஒன்றியச் செயலர் கணேசன் தலைமையில் தஞ்சாவூர் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
கும்பகோணம் நகரக் குழு சார்பில் நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டக் குழு உறுப்பினர் க. சுந்தர்ராஜன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் மு.அ. பாரதி, நகரச் செயலர் இரா. மதியழகன், எம். சீனிவாசன், இ. கோபிகண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கும்பகோணம் ஒன்றியக்குழு சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு ஒன்றியச் செயலர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஏஐடியூசி மாவட்டச் செயலர் இரா. தில்லைவனம், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் ஏ. குருசாமி, ஏ. ராஜேந்திரன், சாமு. தர்மராஜ், சி. ராயப்பன், பா. பூபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருப்பனந்தாளில் ஒன்றியக் குழு சார்பில் ஒன்றியச் செயலர் டி.ஆர். குமரப்பா தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மாவட்டக் குழு உறுப்பினர் க. கண்ணகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவிடைமருதூரில் ஒன்றியக் குழு சார்பில் ஒன்றியச் செயலர் கோ. மணிமூர்த்தி தலைமையில் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.எம். ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஒன்றியச் செயலர் ஆர். செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் கோ. சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பூதலூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பூதலூர் ஒன்றியச் செயலர் ஆர். இராமச்சந்திரன் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஒன்றியத் துணைச் செயலர் கே. செந்தில்குமார், இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலர் ஆர்.ஆர். முகில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பாபநாசத்தில்....
பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் சங்கத்தின் ஒன்றியச் செயலர் வே. உமாபதி தலைமையில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. ஒன்றியத் தலைவர் கே. விஸ்வநாதன், ஒன்றியப் பொருளாளர் பி.கே.ஆர். இளங்கோவன், ஒன்றியத் துணைத் தலைவர் ஜி. சேகர், மாவட்ட துணைச் செயலர் கே. அபிமன்னன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பட்டுக்கோட்டையில்...
பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலர் ஏ.எம். மார்க்ஸ், நகரச் செயலர் எம்.எம்.சுதாகர் தலைமை வகித்தனர். மாநிலக்குழு உறுப்பினர் சி.பக்கிரிசாமி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
பேராவூரணியில்....
பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பா. பாலசுந்தரம் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் பேராவூரணி ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலாளர் ப. காசிநாதன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.