மின் கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 03rd July 2019 08:57 AM | Last Updated : 03rd July 2019 08:57 AM | அ+அ அ- |

தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் நடைபெறவுள்ள மின் கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
2019 ஆம் ஆண்டு ஆக. 17 மற்றும் 18-ம் தேதிகளில் மின் கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து தகுதி வாய்ந்த கம்பியாள் உதவியாளர்களிடமிருந்தும், இத்துறையால் நடத்தப்பட்ட தொழிலாளர்களுக்கான மாலை நேர வகுப்பில் மின் கம்பியாள் பிரிவில் பயிற்சி பெற்றுத் தேறியவர்களிடமிருந்தும், தேசிய புனரமைப்புத் திட்டத்தின் கீழ் இத்துறையால் நடத்தப்பட்ட மின்சாரப் பணியாளர் மற்றும் கம்பியாள் தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்றவர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறன்றன.
தகுதி: விண்ணப்பதாரர் மின் ஒயரிங் தொழிலில் 5 ஆண்டுகளுக்குக் குறையாமல் செய்முறை அனுபவம் உள்ளவராகவும், விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
இத்தேர்வுக்குரிய விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் குறிப்பேட்டை தஞ்சாவூர் அரசுத் தொழிற் பயிற்சி நிலையத்திலிருந்து ரூ.10 ரொக்கமாகச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை விண்ணப்பதாரரே துணை இயக்குநர் / முதல்வர், அரசுத் தொழிற் பயிற்சி நிலையம், தஞ்சாவூர் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சலிலோ அனுப்ப வேண்டும்.
போதுமான விண்ணப்பங்கள் பெறப்படாத நிலையில் தேர்வு மையங்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் அருகிலுள்ள அரசுத் தொழிற் பயிற்சி நிலையத்துக்கு மாறுதல் செய்யப்பட்டு, அங்கு தேர்வுகள் நடைபெறும். தேர்வு மையம் இறுதி செய்வது தொடர்பாக துறைத் தலைவரின் முடிவே இறுதியானது.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் தஞ்சாவூர் அரசுத் தொழிற் பயிற்சி நிலையத் துணை இயக்குநர் / முதல்வருக்குக் கிடைக்க வேண்டிய கடைசித் தேதி ஜூலை 26-ம் தேதி.