இலங்கையில் தமிழர்களுக்காகக் கட்டப்பட்ட வீடுகளில் சிங்களர்கள் குடியேற்றம்: பழ. நெடுமாறன்
By DIN | Published On : 05th July 2019 09:18 AM | Last Updated : 05th July 2019 09:18 AM | அ+அ அ- |

இலங்கையில் ஈழத் தமிழர்களுக்காக இந்திய அரசுக் கட்டிக் கொடுத்த வீடுகளில் சிங்களர்கள் குடியேற்றப்பட்டுள்ளனர் என்றார் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன்.
தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் தெரிவித்தது:
ஈழத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை. ஈழத் தமிழர்கள் தொடர்ந்து கொடுமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். ஈழத் தமிழர்களால் தங்களது சொந்த வீடுகளுக்குத் திரும்ப முடியவில்லை. சிங்களர்களால் பறிக்கப்பட்ட நிலங்கள் இன்னும் திருப்பிக் கொடுக்கப்படவில்லை. தமிழ் மீனவர்களுக்குக் கடலில் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.ராஜபட்ச அரசுக் கடைப்பிடித்த அதே கொள்கைகளையே இப்போதைய சிறிசேனா அரசும் கடைப்பிடிக்கிறது. இலங்கை நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் சம்பந்தன் ஆயுதப் போராட்டத்துக்கு ஆதரவானவர் அல்லர். ஆனால், அவரே ஆயுதப் போராட்டத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருப்பதைப் பார்க்கும்போது, அங்கு நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை உணர முடிகிறது.
இலங்கையில் போரின்போது வீடுகளை இழந்த ஈழத்தமிழர்களுக்கு இந்திய அரசு சார்பில் ரூ. 1,000 கோடியில் வீடுகள் கட்டித் தரப்படும் என மன்மோகன் சிங் அரசு அறிவித்தது. அதன் பிறகு மோடி அரசு இத்திட்டத்தை விரைவுபடுத்தியது. ஆனால், பெரும்பாலான குடியிருப்புகளில் சிங்களர்களே குடியேற்றப்பட்டுள்ளனர். இதை ஏன் எனக் கூட இந்திய அரசுக் கேட்கவில்லை. சிங்களர்களின் குடியேற்றத்துக்கு இந்திய அரசு மறைமுகமாக உதவி செய்கிறது.வடக்கு மாகாண முதல்வராக இருந்த விக்னேஸ்வரன் தங்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்றும், அனைத்து அதிகாரங்களும் சிங்கள ராணுவத்திடமே உள்ளது எனவும் கூறியிருக்கிறார். இதில், இந்திய அரசுத் தலையிட்டு ஏன் அதிகாரம் கொடுக்கவில்லை எனக் கேட்கவில்லை.
ஜூலை 6, 7-இல் மாநாடு
தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலை 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் மாநாடு சனி, ஞாயிற்றுக்கிழமையில் (ஜூலை 6, 7) நடைபெறவுள்ளது. இதில், ஈழத் தமிழர்களின் பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆராய்ந்து முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன என்றார் நெடுமாறன். அப்போது, தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலர் அய்யனாபுரம் சி. முருகேசன், துரை. குபேந்திரன், சு. பழனிராசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.