நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிப்பு: மறு பரிசீலனை செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
By DIN | Published On : 05th July 2019 09:20 AM | Last Updated : 05th July 2019 09:20 AM | அ+அ அ- |

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிப்பை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அச்சங்கச் செயலர் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் தெரிவித்திருப்பது:
பிரதமர் நரேந்திரமோடி 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வாக்குறுதியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்திய விவசாயிகளின் நலன் கருதி, விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்தும் விதமாக, 2005-இல் மத்திய அரசால் அமைக்கப்பட்ட இந்திய விவசாயிகளின் ஆணையத் தலைவர் எம்.எஸ். சுவாமிநாதன் அறிக்கை பரிந்துரைப்படி, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாயமான, கட்டுப்படியான விலையை வழங்குவோம் என வாக்குறுதி அளித்தார். ஆனால், மோடி ஆட்சிக்கு வந்த பிறகு விலை ஏதும் தரப்படவில்லை.
பிரதமர் மோடி 2016, பிப். 23-இல் உத்தரபிரதேச மாநிலம் பரோலியில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் விவசாயிகளின் வருவாயை 2022 ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்குவேன் என முழங்கி, விவசாயிகளுக்கு ஆசை வார்த்தைகளை மனதின் குரல் (மன் கீ பாத்) நிகழ்ச்சியில் அறிவித்தார்.
இதற்கு எதிராக மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை பிரதமர் தலைமையில் கூடி, கடந்த ஆண்டு நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 200 உயர்த்தி வழங்கியது. மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் தற்போது நெல் குவிண்டால் ஒன்றுக்கு வெறும் ரூ. 65 மட்டுமே என்பது, பிரதமரின் மனதின் குரலின்படி அப்பட்டமான அநீதி.
கடந்த ஆண்டு ரூ. 200 என அறிவிக்கப்பட்டபோது, எம்.எஸ். சுவாமிநாதன் அறிக்கை பரிந்துரைப்படி குறைவாக உள்ளதாக விவசாயிகள் வலியுறுத்தினர். இந்நிலையில், நிகழாண்டு அதைவிட குறைவாக ரூ. 65 அறிவிக்கப்பட்டுள்ளது. இது, விவசாயிகளை ஏமாற்றும் செயலாக உள்ளது. விவசாயிகளின் வாழ்வை உயர்த்துவோம் என்பதெல்லாம் வெறும் கண் துடைப்பு நாடகமாகவே விவசாயிகள் பார்க்கிறோம்.
மத்திய வேளாண்மை துறை அமைச்சர் அறிவித்த விலை அறிவிப்பைத் திரும்பப் பெற்று, நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ. 3,000 அறிவிக்க வேண்டும். அப்போதுதான் உயர்ந்து வரும் விலைவாசி உயர்வுக்கும், இடுபொருட்கள், உற்பத்தி செலவுக்கும் கட்டுப்படியாகும்.