விவசாயிகளுக்கான கெளரவ நிதி திட்டம்: ஜூலை 9-இல் சிறப்பு குறைதீர் முகாம்
By DIN | Published On : 05th July 2019 09:21 AM | Last Updated : 05th July 2019 09:21 AM | அ+அ அ- |

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பிரதம மந்திரி விவசாயிகளுக்கான கெளரவ நிதி திட்டத்தின் கீழ் பயன் பெற விடுபட்ட விவசாயிகளுக்காகச் சிறப்பு குறைதீர் முகாம்கள் ஜூலை 9-ம் தேதி நடைபெறவுள்ளது என ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:
மாவட்டத்தில் பிரதம மந்திரி கெளரவ நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்காக ஆண்டுக்கு ரூ. 6,000 வழங்கும் வகையில், பட்டா நிலம் வைத்து விவசாயம் செய்து வரும் தகுதியான விவசாயிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், இதுவரை 97,020 விவசாயிகளின் பட்டியல் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இப்பட்டியலில் விடுபட்ட தகுதியான அனைத்து விவசாயிகளும் தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ள ஏதுவாக மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்கள், வருவாய் ஆய்வர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், கோட்டாட்சியர் அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் ஜூலை 9-ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சிறப்பு குறை தீர் முகாம் நடைபெற உள்ளது.
இம்முகாம்களில் பிரதம மந்திரி கெளரவ நிதி திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியான விடுபட்ட விவசாயிகள் மற்றும் வெளியூர்களில் வசிக்கும் விவசாயிகள் அனைவரும் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம். குடும்பத் தலைவர் பெயரில் உள்ள பட்டாவை மாறுதல் செய்து பயன் பெற அவசியம் உள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் பட்டா மாறுதல் செய்து பயனடையலாம்.
விவசாயிகள் தங்களது நிலத்துக்கான விவரங்களுடன் ஆதார் எண், வங்கிக் கணக்கு எண், ஸ்மார்ட் கார்டு (குடும்ப அட்டை) எண், செல்லிடப்பேசி எண் ஆகிய விவரங்களுடன் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர்களையோ, வருவாய் ஆய்வர்களையோ, வட்டாட்சியர்களையோ, கோட்டாட்சியர் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகி தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.