விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 08th July 2019 08:03 AM | Last Updated : 08th July 2019 08:03 AM | அ+அ அ- |

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க வேண்டும் என தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலை 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் மாநாட்டின் நிறைவு நாளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தஞ்சாவூர் விளார் சாலையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இந்த இரு நாள் மாநாடு சனிக்கிழமை தொடங்கியது. நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழீழ விடுதலைப்புலிகளின் இயக்கம் ஈழத் தமிழர்களின் உரிமைகளைக் காக்கவும், அவர்கள் விடுதலை பெறவும் போராடி வருகிற அமைப்பு. ஆனால், இந்த அமைப்பின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளின் கீழ் இந்திய அரசுப் பழி சுமத்தித் தடை விதித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் இந்த அமைப்பின் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கியதையொட்டி ஐரோப்பிய நாடுகள் உட்பட உலக நாடுகள் பலவும் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கிவிட்டன. இந்நிலையில் இந்திய அரசு அந்தத் தடையை நீட்டித்திருப்பதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. உடனடியாக இந்தத் தடையை விலக்கிக் கொள்ள வேண்டும்.
ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு: இலங்கையில் போர் முடிந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஈழத் தமிழர்களின் பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை. சொந்த ஊர்களுக்கோ, வீடுகளுக்கோ அவர்கள் திரும்ப முடியாத நிலை நீடிக்கிறது. ராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களின் நிலைமை என்ன என்பது அவர்களுடைய குடும்பத்தினருக்குக் கூடத் தெரிவிக்கப்படவில்லை. தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. சுருங்கக்கூறின் தமிழின அழிப்பு தொடர்கிறது. இந்நிலைமையில் ஈழத் தமிழர்களின் எதிர்காலம் குறித்து இலங்கையிலும் மற்றும் உலக நாடுகள் பலவற்றிலும் வாழ்கிற ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி அவர்களுடைய விருப்பத்திற்கிணங்க அரசியல் ரீதியான தீர்வினைக் காண்பதற்கு ஐ.நா. பேரவை முன்வர வேண்டும்.
செஞ்சிலுவைச் சங்க விசாரணை தேவை: இலங்கையில் போரின் போதும், அதற்குப் பிறகும் பல்லாயிரக்கணக்கானவர்கள் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களைப் பற்றிய பதிவேடுகள் எதுவும் சிங்கள அரசிடம் இல்லை. அவர்களுடைய கதி என்னவாயிற்று? என்பது அவர்களுடைய குடும்பத்தினருக்கு இன்னமும் தெரிவிக்கப்படாத நிலைமையே நீடிக்கிறது. பன்னாட்டுச் செஞ்சிலுவைச் சங்கம் இப்பிரச்னையில் தலையிட அதிகாரமும் உரிமையும் உள்ளது.
எனவே இலங்கையில் காணாமல் போனவர்கள் குறித்த விசாரணையைப் பன்னாட்டுச் செஞ்சிலுவைச் சங்கம் உடனடியாக மேற்கொண்டு அவர்கள் குறித்த நிலைமையை வெளிப்படையாகத் தெரிவிக்கவும், உயிரோடு இருப்பவர்களை மீட்டு அவர்களுடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவும் முன்வர வேண்டும்.
ஈழத் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பு: இலங்கையில் வாழும் தமிழர்களை முற்றிலுமாக அழித்து ஒழிக்கும் இன அழிப்பு நடவடிக்கைகளில் சிங்கள அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
சர்வதேச சட்டத்துக்கிணங்க இன அழிப்பு என்பது தண்டனைக்குரிய குற்றமாகும். 1948 ஆம் ஆண்டு இலங்கைத் தீவின் ஆட்சி அதிகாரத்தைச் சிங்களர் கையில் ஒப்படைத்துவிட்டு பிரிட்டன் வெளியேறிய நாள் முதல் தமிழர்களுக்கெதிரான இன அழிப்பைத் தொடர்ந்து வந்த சிங்கள அரசுகள் செய்து வருகின்றன.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய பெரும் பொறுப்பும், நீங்காத கடமையும் ஐ.நா. பேரமைப்புக்கு உண்டு. அழிவின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டுக் கதறிக் கொண்டிருக்கும் ஈழத் தமிழ் மக்களைக் காப்பாற்ற ஐ.நா. பேரவை முன் வர வேண்டும்.