தஞ்சாவூர் ஆட்சியரகம் முன் நாளை முதல் உண்ணாவிரதம்: பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம் முடிவு

காவிரிப் பாசனப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பதற்கு நிகழ் சட்டப்பேரவைக்

காவிரிப் பாசனப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பதற்கு நிகழ் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி தஞ்சாவூர் ஆட்சியரகம் முன் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) முதல் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படவுள்ளது என்றார் பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கத்தின் நிறுவனத் தலைவர் க.கா.இரா. லெனின்.
தஞ்சாவூரில் இப்பேரியக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், எடுக்கப்பட்ட முடிவு குறித்து செய்தியாளர்களிடம் லெனின் தெரிவித்தது:
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறைவேற்றப்பட்டால் குடிநீருக்கே ஏங்க வேண்டிய நிலை ஏற்படும். குடிநீருக்கே பிரச்னை ஏற்படும் நிலையில், விவசாயத்துக்கு வாய்ப்பே இல்லை. 
எனவே, காவிரி பாசனப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிப்பது குறித்து நிகழ் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றுவதுடன் சட்டமாக இயற்ற வேண்டும். இதை வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகம் முன் பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம் சார்பில் வெள்ளிக்கிழமை முதல் கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. 
இதற்குக் காவல் துறை அனுமதி மறுத்துள்ள நிலையில், இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக பல கட்டப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஜயங்கொண்டத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு ஓ.என்.ஜி.சி. முத்திரையுடன் கூடிய உடைகளை அளித்து அந்நிறுவனத்துக்கு ஆதரவாகவும், போராடும் மக்களுக்கு எதிராகவும் ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். மேலும், இப்போராட்டத்தால், ஓ.என்.ஜி.சி.க்கு ஆதரவாக மாநில அரசு  செயல்படுகிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இதுதொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.
வாழ்வாதார போராளி முகிலனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர் மீதான வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார் லெனின். 
அப்போது, அகில இந்திய மக்கள் சேவை இயக்கத்தின் விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க. சண்முகசுந்தரம், பேரழிப்பிற்கு எதிரான பேரியக்க நிர்வாகிகள் திருவாரூர் ஆர்.ஜி. ரத்தினக்குமார், பொருளாளர் சதாசிவம், முத்துப்பேட்டை சுந்தரம், இயற்கை ஆர்வலர் செந்தில், தமிழர் அறம் நிறுவனர் தலைவர் ராமசாமி, மதிமுக மாநில விவசாய அணி செயலர் ஆடுதுறை இரா. முருகன், அக்ரி பரமசிவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com