மக்காச்சோளப் பயிரைத் தாக்கும் படைப்புழுவை கட்டுப்படுத்தும் விழிப்புணர்வு முகாம்: 3 கிராமங்களில் நடைபெற்றது

பட்டுக்கோட்டை அருகே ஏனாதி, பாளமுத்தி, வேப்பங்காடு ஆகிய 3 கிராமங்களில் மக்காச்சோளப் பயிரைத் தாக்கி

பட்டுக்கோட்டை அருகே ஏனாதி, பாளமுத்தி, வேப்பங்காடு ஆகிய 3 கிராமங்களில் மக்காச்சோளப் பயிரைத் தாக்கி பேரழிவை ஏற்படுத்தும் படைப்புழுவை கட்டுப்படுத்துவது குறித்த விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் ஜி.மதிராஜன் பேசுகையில், மக்காச்சோளப் பயிரில் பேரழிவை ஏற்படுத்தும் படைப்புழுவின் வாழ்க்கை சரிதம், படைப்புழுவின் தாக்குதல் அறிகுறிகள், அதை கட்டுப்படுத்தும் முறைகள் ஆகியன குறித்து விளக்கினார். 
தஞ்சாவூர் வேளாண்மை துணை இயக்குநர் ( உழவர் பயிற்சி நிலையம்) ஆர். மதியரசன் பேசுகையில், விதைப்பு முதல் அறுவடைக் காலம் வரை ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளை கடைப்பிடித்து படைப்புழுவின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகளை எடுத்துரைத்தார்.  கோடை உழவு செய்து கூட்டுப்புழுக்களை அழித்தல், விதை நேர்த்தி செய்து எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துதல், அனைத்து விவசாயிகளும் ஒரே நேரத்தில் விதைப்புப் பணியை மேற்கொள்ளுதல் போன்ற பயிர் பாதுகாப்பு மேலாண்மை முறைகளை விளக்கிக் கூறினார்.
தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநர் (தரக் கட்டுப்பாடு) ஆர். சாருமதி பேசியது: விதை நேர்த்தி செய்தும், மெட்டாரைசியம் அனிசோபிலியே தெளித்தும் படைப்புழு தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். இயற்கை சூழல் முறையில் வரப்பு பயிர்களாக சூரியகாந்தி, சாமந்தி, தட்டைப்பயிறு ஆகியவற்றையும்,  மக்காச்சோளத்தில் ஊடுபயிராக உளுந்து, பச்சைப்பயிறு, தட்டைப்பயிறு ஆகியவற்றையும் பயிரிட்டு கட்டுப்படுத்தலாம் என்றார். 
பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் (பொ)  சா.சங்கீதா தலைமையில் வேளாண் உதவி அலுவலர்கள்,  விதை உதவி அலுவலர்கள், அட்மா திட்ட களப்பணியாளர்கள் குழுக்களாகப் பிரிந்து, பயிரின் பல்வேறு நிலைகளில்  படைப்புழுவின் தாக்குதல் குறித்து கண்காணித்து, சேத விவரம் கணக்கிட்டு, அந்த விவரத்தை  சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு எடுத்துக் கூறி, தகுந்த பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும் என அறிவுறுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com