ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு இல்லை: எச். ராஜா பேட்டி

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு இல்லை என்றார் பாஜக தேசியச் செயலர் எச். ராஜா.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு இல்லை என்றார் பாஜக தேசியச் செயலர் எச். ராஜா.
தஞ்சாவூர் பெரியகோயில் அருகேயுள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு புதன்கிழமை மாலை, மாலை அணிவித்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
இஸ்ரேல் நாட்டில் ஹைட்ரோ கார்பன் மூலம்தான் முழு எரிசக்தியும் நிறைவு செய்யப்படுகிறது. அந்நாடு உலக அளவில் விவசாயத்தில் முன்னோடியாகத் திகழ்கிறது. அந்நாட்டில் வயலில் ரசாயன உரம் கொட்டுவதில்லை. ஆனால், நம் நாட்டில் வயலில் ரசாயன உரம் கொட்டப்படுகிறது. எனவே, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுப்பதால் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது. 
நிலத்தடி நீர் 2,000 அடிக்குள் இருக்கிறது. ஆனால், ஹைட்ரோ கார்பன் 6,000 அடிக்கும் அதிகமான ஆழத்தில்தான் எடுக்கப்படவுள்ளது. நீரியல் விரிசல் முறை பயன்படுத்தினால் நிலத்தடி நீர் மாசுபடும். சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும். இந்த முறையை பிரதமர் மோடியே மறுத்துவிட்டார். 
எனவே, ஆழ்குழாய் கிணறு போடுவதுபோல மேற்கொள்ளும்போது, 6,000 அடிக்கு கீழே உள்ள இயற்கை எரிவாயு மட்டுமே கிடைக்கும். அதனால், பாதிப்பு எதுவும் ஏற்படாது. அய்யாக்கண்ணு, வைகோ போன்ற சிலர்தான் வேண்டுமென்றே பீதியை ஏற்படுத்தி, மக்களைத் தூண்டிவிடுகின்றனர்.
தமிழ்ப் பாரம்பரியம், பண்பாடு, கலாசாரத்தை அழிப்பதற்குத் தமிழ்நாட்டில் பெரிய சதி நடக்கிறது. மேலும், தலித் என்ற போர்வையில் இந்துக்களைப் பிளவுபடுத்தி மத மாற்றம் செய்யப்படுகிறது. 
காவிரி நீர் மேலாண்மை, நில சீர்த்திருத்தம் உள்ளிட்டவற்றை மாமன்னன் ராஜராஜ சோழன்தான் கொண்டு வந்தான். உலகத்திலேயே முதல் கப்பற்படையை அமைத்தவர் ராஜேந்திர சோழன். அதனால்தான் ராஜேந்திர சோழனுக்கு மோடி அரசு அஞ்சல்தலை வெளியிட்டுள்ளது. நம் கப்பற்படையின் ஒரு கப்பலுக்கு ராஜேந்திர சோழன் பெயர் வைத்துள்ளோம். இந்நிலையில், ராஜராஜசோழன் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பா. ரஞ்சித் சதித் திட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்றார் ராஜா.  
தஞ்சாவூரில் இயக்குநர் பா. ரஞ்சித்தை கண்டித்து மாமன்னன் ராஜராஜசோழன் எழுச்சி பேரவை சார்பில் புதன்கிழமை பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இதற்கு காவல் துறை அனுமதி மறுத்துவிட்டதால், ராஜராஜசோழனுக்கு மாலை அணிவித்து பாராட்டுக் கூட்டம் நடத்தப்பட்டது. 
இக்கூட்டத்தில், பாஜக மாநில பொதுச் செயலர் கருப்பு முருகானந்தம்,  பாஜக மாவட்டத் தலைவர் ஆர். இளங்கோ, எம்.எஸ். ராமலிங்கம், நிர்வாகிகள் பி. ஜெய் சதீஷ், யு.என். உமாபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விவசாய அமைப்பு கண்டனம்
ஹைட்ரோ கார்பன் எடுப்பதால் எந்த ஆபத்தும் இல்லை என எச். ராஜா கூறிய கருத்துக்கு விவசாய அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க. சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கக் கூடாது என விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில், எச். ராஜாவின் பேச்சு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. 
தமிழகத்தைப் பாலைவனமாக்கியே தீருவேன் என பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பது என்பது தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கும் செயலாக இருக்கிறது. தமிழக மக்களின் எதிர்ப்பை மீறி திட்டத்தைச் செயல்படுத்த துடிப்பதன் உள்நோக்கத்தை மக்கள் புரிந்து கொள்ள தொடங்கி விட்டனர். எனவே தமிழக மக்களைக் காக்க ஹைட்ரோ கார்பனுக்கு எதிராகப் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com