கலை விருதுகள் பெற ஜூலை 25-க்குள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 13th July 2019 07:36 AM | Last Updated : 13th July 2019 07:36 AM | அ+அ அ- |

தஞ்சாவூர் மாவட்டக் கலை மன்றம் சார்பில் வழங்கப்படும் சிறந்த கலைஞர்களுக்கு 2018 - 19 ஆம் ஆண்டுக்கான கலை விருதுகள் பெற ஜூலை 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது: கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் தஞ்சாவூர் மாவட்டக் கலை மன்றத்தின் மூலம் மாவட்டத்தில் இயல், இசை, நாடகம் முதலிய கலைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கும் அதிகமான கலைகளில் சிறந்து விளங்கும் ஐந்து கலைஞர்களுக்கு வயது மற்றும் கலைப் புலமை அடிப்படையில் விருதுகள் வழங்கப்படவுள்ளது.
எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாட்டு, பரதநாட்டியம், ஓவியம், கும்மிக் கோலாட்டம், மயிலாட்டம், பாவைக்கூத்து, தோல்பாவை, நையாண்டிமேளம், கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை, மரக்கால் ஆட்டம், கோல்கால் ஆட்டம், கழியல் ஆட்டம், புலியாட்டம், காளையாட்டம், மானாட்டம், பாம்பாட்டம், குறவன் குறத்தி ஆட்டம், ஆழியாட்டம், கைச்சிலம்பாட்டம் (வீரக்கலை) மற்றும் இசைக் கருவிகள் வாசித்தல் போன்ற நாட்டுப்புறக் கலைகள் மற்றும் செவ்வியல் கலைகள் என அனைத்து வகை முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
18 வயதும் அதற்குட்பட்டக் கலைஞர்களுக்குக் கலை இளமணி விருதும், 19 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட கலைஞர்களுக்குக் கலை வளர்மணி விருதும், 36 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட கலைஞர்களுக்கு கலைச் சுடர்மணி விருதும், 51 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட கலைஞர்களுக்குக் கலை நன்மணி விருதும், 61 வயதுக்கும் மேற்பட்ட கலைஞர்களுக்குக் கலை முதுமணி விருதும் வழங்கப்படவுள்ளது.
மாவட்டத்தில் தேசிய விருது, மாநில விருது மற்றும் மாவட்டக் கலை மன்றத்தால் வழங்கப்பட்ட விருதுகள் பெற்ற கலைஞர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பம் செய்யக்கூடாது. விருது பெறத் தகுதி வாய்ந்த கலைஞர்களிடமிருந்து ஜூலை 25-ம் தேதிக்குள் உதவி இயக்குநர், மண்டல கலை பண்பாட்டு மையம், பழைய மாவட்ட ஆட்சியரக அருங்காட்சியக வளாகம், நீதிமன்றச் சாலை, தஞ்சாவூர் - 613 001 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.