சுடச்சுட

  

  சாகுபடிக்குத் தேவையான நீரைப் பெற வட்டார அளவில் திட்டம்: மத்திய அரசின் கூடுதல் செயலர் பேச்சு

  By DIN  |   Published on : 14th July 2019 03:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  சாகுபடிக்குத் தேவையான நீரைப் பெற வட்டார அளவில் திட்டமிடப்படுகிறது என்றார் மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகக் கூடுதல் செயலரும், நீர் மேலாண்மை இயக்கத் திட்டக் குழுத் தலைவருமான பிரமோத்குமார் பதக்.
  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நீர் மேலாண்மை இயக்கம் (ஜல் சக்தி அபியான்) தொடர்பாக, அனைத்துத் துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் அவர் பேசியது:
  நீர்ப் பாதுகாப்பு மற்றும் மழை நீர் சேகரிப்பு, பாரம்பரிய மற்றும் இதர நீர் நிலைகளைப் புதுப்பித்தல், பயனற்ற கிணறுகளை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வருதல் மற்றும் நிலத்தடி நீரை மேம்படுத்துதல், நீர்நிலை மேம்பாடு மற்றும் காடுகள் வளர்த்தல் ஆகியவையே நீர் மேலாண்மை இயக்கத்தின் முக்கிய குறிக்கோள்கள். இதன் மூலம், பாசனத்துக்குத் தேவையான நீரைப் பெறுவதற்கு வட்டாரம் மற்றும் மாவட்ட அளவில் திட்டமிடப்படுகிறது.
  இந்த இயக்கம் தேசிய அளவில் நீர் பற்றாக்குறை நிலவும் 256 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்த மாவட்டங்களில் உள்ள 1,592 வட்டாரங்களில் நீர் ஆதாரங்களைச் செறிவூட்டி, மேம்படுத்தும் விதமாக இந்த இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
  இந்த இயக்கம் பருவ மழை காலமான ஜூலை 1 முதல் செப். 15-ஆம் தேதி வரை செயல்படுத்தப்படும். வடகிழக்குப் பருவமழை பெறப்படும் மாநிலங்களில் அக். 1 முதல் நவ. 30- ஆம் தேதி வரை இரண்டாம் கட்டமாகச் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
  தஞ்சாவூர் மாவட்டத்தில்  மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, பொதுப்பணி, ஊரக வளர்ச்சி, வனம், வேளாண், தோட்டக்கலை உள்ளிட்ட துறைகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்,உள்ளிட்ட அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து, சிறப்பான முறையில் நீர் மேலாண்மை இயக்கத் திட்டத்தின் கீழ் நீர் நிலைகளில் பராமரிப்புப்பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
  இதில் புதிய தடுப்பணைகள் கட்டுதல், குளம் மேம்பாடு செய்தல், நீர் உறிஞ்சி குழிகள் அமைத்தல், கசிவுநீர் குட்டைகள், நாற்றங்கால் அமைத்தல், மரக்கன்றுகளை நட்டு பராமரித்தல் போன்ற பல்வேறு பணிகள் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்படும்.
  இப்பணிகள் அனைத்தும் உரிய காலத்துக்குள் முடிக்க அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கால தாமதம் செய்யக் கூடாது என்றார் பிரமோத்குமார் பதக்.
   மாவட்டத்தில் நீர் சேமிப்புக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை விளக்கம் அளித்தார்.
  இக்கூட்டத்தில் மாவட்ட ஆய்வுக் குழு உறுப்பினர்கள் பால்மிகி பிரசாத், பி.ஜி. கலாதரன், சைலா டைடஸ், ஷித்திஜ் மோகன், பிரஜ் நந்தன் பிரசாத், ராகுல் காஷ்யப், சுதிர் குமார், டி.கே.செளத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai