அஞ்சல் துறையின் உதவித்தொகை திட்டத்துக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 21st July 2019 03:06 AM | Last Updated : 21st July 2019 03:06 AM | அ+அ அ- |

இந்திய அஞ்சல் துறை சார்பில் செயல்படுத்தப்படும் பள்ளி மாணவர்களுக்கான உதவித் தொகை திட்டத்துக்கு ஜூலை 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து தஞ்சாவூர் கோட்ட முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அஞ்சல்தலை சேகரிப்பை மாணவர்கள் மத்தியில் ஊக்குவிக்கும் விதமாக, 2017 ஆம் ஆண்டில் தீன் தயாள் ஸ்பார்ஷ் யோஜனா என்ற உதவித் தொகை திட்டத்தை அஞ்சல்துறை தொடங்கியது.
இத்திட்டத்தின் மூலம் பள்ளி மாணவர்களுக்கு இந்திய அளவில் இரண்டு நிலைகளில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஒரு ஆண்டுக்கான கல்வி உதவித் தொகையாக ரூ. 6 ஆயிரம் வழங்கப்படுகிறது.
இந்த உதவித் தொகை திட்டத்தில் குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்கள் அல்லது அதற்கு சமமான மதிப்பெண்களைப் பெற்றுள்ள 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம். இதில் பங்கேற்க மாணவர்கள் தனியாக அஞ்சல்தலை சேகரிப்புக் கணக்கு வைத்திருக்க வேண்டும். அல்லது தங்களது பள்ளியில் அஞ்சல்தலை சேகரிப்பு கிளப்பில் உறுப்பினராக இருக்க வேண்டும். இல்லையெனில் போட்டியில் பங்கேற்க இயலாது.
தேர்வின் செயல்முறை இரு நிலைகளைக் கொண்டிருக்கும். வருகிற ஆக. 26-ஆம் தேதி முதல் நிலையில் மண்டல நிலை அஞ்சல்தலை சேகரிப்பு தொடர்பான எழுதப்பட்ட வினாடி வினா, அஞ்சல் அலுவலர்களால் நடத்தப்படும்.
முதல் நிலையில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் இரண்டாம் நிலை இறுதித் தேர்வுக்கு அஞ்சல்தலை சேகரிப்பு தொடர்பான உரிய திட்டத்தை அளிக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பங்களை அஞ்சலக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 25-ஆம் தேதிக்குள் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், தஞ்சாவூர் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு தஞ்சாவூர் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04362 - 237055, 275088, 231022 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.