Enable Javscript for better performance
நூறு ஏரிகள் திட்டத்தை கைவிட வேண்டும்: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    நூறு ஏரிகள் திட்டத்தை கைவிட வேண்டும்: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 25th July 2019 09:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முதல்வர் அறிவித்துள்ள நூறு ஏரிகள் திட்டத்தை கைவிட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
    பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி வட்ட  விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
    கூட்டத்துக்கு பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமை வகித்தார். டிஎஸ்பி எஸ். கணேசமூர்த்தி, வட்டாட்சியர்கள் அருள்பிரகாசம் (பட்டுக்கோட்டை), ஜெயலெட்சுமி (பேராவூரணி), வட்ட வழங்கல் அலுவலர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    கூட்டத்தில் பங்கேற்ற வா.வீரசேனன், ராஜ.ராமலிங்கம், சந்திரன், நாராயணன், முத்துவேல், கூத்தலிங்கம், சவரிமுத்து, கமால்பாட்சா, ஜெயச்சந்திரன், அண்ணாதுரை, மெய்கண்டன்  உள்ளிட்ட விவசாயிகள் வலியுறுத்திய கோரிக்கைகள்:
    பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதி காட்டாறுகளில் மணல் திருட்டை தடுத்து,  நிலத்தடி நீர்மட்டம் உயர வழிவகை செய்ய வேண்டும். முதல்வர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்த நூறு ஏரிகள் திட்டத்தால் ஒரு சொட்டு தண்ணீர்கூட கல்லணைக்கு வந்து சேராது. எனவே, அந்தத் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.
    புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசு நிவாரணம் பெறத் தேவையான அடங்கல் பதிவுகளை முறையாக பராமரிக்க வேண்டும். ஏரிகளில் சவ்வூடு மணல் எடுக்கும்போது மதகு மட்டத்தைவிட மிக ஆழமாக மணல் எடுக்க அனுமதிக்கக் கூடாது. அரசு தரமான தென்னை நாற்றுக்களை தேர்வு செய்து, தரமான தென்னங்கன்றுகளை உற்பத்தி செய்து வழங்க வேண்டும். 
    மதுக்கூர் வடக்கு கிராமத்தில் 420 ஏக்கர் பரப்புள்ள கருப்பேரியை அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கி குடிமராமத்து செய்தால் 2,000 ஏக்கர் சாகுபடி நிலம் பாசன வசதி பெறும். பட்டுக்கோட்டை, பேராவூரணி வட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டு இதுவரை இழப்பீடு வழங்கப்படாமல் விடுபட்டுபோன வீடுகள் மற்றும் தென்னை மரங்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்.
    புனல்வாசல் பெரிய ஏரி, பிரண்டை குளம் ஏரிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். புனல்வாசல் ஊராட்சி நீர்தேக்கத் தொட்டியிலிருந்து தெருக்குழாய்கள் வழியாக செல்லும் குடிநீரை இடைமறித்து உறிஞ்சுவதை தடுக்க வேண்டும். மதுக்கூர் ஒன்றியம், பெரியகோட்டை ஊராட்சி அலுவலகம் எதிரில் மிக மோசமாக பழுதடைந்துள்ள குடிநீர் தேக்கத் தொட்டியை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும் என்றனர். 
    நிறைவாக, பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் பேசியது: பட்டுக்கோட்டை, பேராவூரணி வட்டங்களில் உள்ள ஏரி, குளங்களின் வரைபடங்களை ஆய்வு செய்து, முன்னுரிமை அடிப்படையில் ஏரி, குளங்கள் தூர்வாரப்படும். மணல் திருட்டு பொதுமக்கள் ஒத்துழைப்புடன் தடுக்கப்படும். புயலால் பாதிக்கப்பட்டு இதுவரை நிவாரணம் கிடைக்க பெறாதவர்களை ஆய்வு செய்து அவர்களுக்கு நிவாரணம் கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.  பொதுப் பணித் துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai