Enable Javscript for better performance
புதிய கல்விக் கொள்கையை ஏற்கக் கூடாது என வலியுறுத்தி முதன்மைக் கல்வி அலுவலரிடம் திராவிட மாணவர் கழகத்த- Dinamani

சுடச்சுட

    

    புதிய கல்விக் கொள்கையை ஏற்கக் கூடாது என வலியுறுத்தி முதன்மைக் கல்வி அலுவலரிடம் திராவிட மாணவர் கழகத்தினர் மனு அளிப்பு

    By DIN  |   Published on : 25th July 2019 09:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதிய கல்விக் கொள்கையை ஏற்கக்கூடாது என வலியுறுத்தி தஞ்சாவூர் முதன்மைக் கல்வி அலுவலரிடம் திராவிட மாணவர் கழகத்தினர் புதன்கிழமை மனு அளித்தனர்.
    தஞ்சாவூர் முதன்மைக் கல்வி அலுவலர் எம். ராமகிருஷ்ணனிடம் திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா. செந்தூரபாண்டியன் தலைமையில் திராவிடர் கழக மாநில அமைப்பாளர் இரா. குணசேகரன், நிர்வாகிகள், மாணவர் கழகத்தினர் அளித்த மனு:
    மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவு,  தாழ்த்தப்பட்ட,  பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் விதமாக உள்ளது. பள்ளிக் கல்வியில் கற்றலுக்கென சம வாய்ப்பு ஏற்படுத்தாமல் இந்த மாற்றம் பயன் தராது. குழந்தைகள் தாங்களாகவே பள்ளிக் கல்வி முறையை விட்டு வெளியேற வழி வகை செய்யும். இடைநிற்றலை ஒழிக்க வேண்டிய அரசு இடைநிற்றலுக்குத் திட்டமிட்டுத் துணைப் போகிறது. 
    ஒன்பதாம் வகுப்பு முதல் தன்னுடைய தொழில் கல்வியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்பது மோசடியானது. இத்தகைய தொழிற்பயிற்சிகளை, தொழிற் கல்வியை உயர் வகுப்பினரோ, பணக்காரர்களோ கற்கப் போகிறாரா? ஏழைகள், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்த உழைக்கும் மக்களை மீண்டும் உடல் உழைப்பை நோக்கியே தள்ளும் முயற்சி இது. எனவே, இதைக் கடுமையாக எதிர்க்கிறோம்.
    தேர்வு என்பதே குழந்தைகள் மத்தியில் அச்சத்தை உண்டாக்கும் ஒரு செயல்முறை. தேர்வில் கற்றல் திறன் குறைபாடு எனக் கண்டறிந்து, அக்குழந்தையை அதே வகுப்பில் படிக்கச் செய்தால், அத்தகைய அணுகுமுறை குழந்தை மனதில் பல பாதிப்புகளை உண்டாக்கும். பள்ளிக் கல்வி முறையை விட்டு குழந்தை வெளியேற வழிவகுக்கும். 
    தேசிய தேர்வு முகமையின் நோக்கம், அடிப்படையில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, கிராமப்புற மாணவர்களை மேற்படிப்புக்குச் செல்ல விடாமல் அங்கேயே தடுத்து நிறுத்தி, தன்னுடைய குடும்ப, ஜாதித் தொழில்களையும் தொழில் சார்ந்த வேலையையும் செய்ய வைப்பதற்கான மறைமுகத் திட்டம். 
    இத்தகைய கொள்கை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளாத அரசியல் அமைப்புச் சட்ட உருவாக்கத்தைப் புரிந்து கொள்ளாத - உள்வாங்காத, சமூக நீதிக்கும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 15, 16-க்கும் எதிரான கொள்கை உடையதாக உள்ளது. எனவே, புதிய கல்விக் கொள்கையை ஏற்கக் கூடாது என தெரிவித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai