முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
தஞ்சாவூரில் பூஜாரிகள், அருள்வாக்கு அருள்வோர் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 30th July 2019 09:47 AM | Last Updated : 30th July 2019 09:47 AM | அ+அ அ- |

தஞ்சாவூர் ரயிலடியில் தஞ்சை மாவட்ட கிராம கோயில் பூஜாரிகள் பேரவை மற்றும் அருள்வாக்கு அருள்வோர் பேரவையினர் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அறுபது வயது நிறைவடைந்த அனைத்து பூஜாரிகளுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பூஜாரிகளுக்கு நல வாரிய உறுப்பினர் அட்டை வழங்க வேண்டும். மேலும், பூஜாரிகளுக்கு நல வாரியச் சலுகைகள் அனைத்தும் வழங்க வேண்டும். கிராம கோயில் பூஜாரிகளுக்கு மாதம் ரூ. 5,000 ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
கிராம கோவில் பூஜாரிகள் பேரவை மாவட்ட அமைப்பாளர் ஜி. பழனிசாமி தலைமை வகித்தார். அருள்வாக்கு அருள்வோர் பேரவை மாவட்ட அமைப்பாளர் எஸ். பரமசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கும்பகோணம்: இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் காந்தி பூங்கா அருகே கிராம கோவில் பூஜாரிகள் பேரவையினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், மாவட்ட அமைப்பாளர் சிவ. செந்தில் தலைமையில் பலர் கலந்து கொண்டனர்.