மூன்று ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தல்

மூன்று ஆண்டுகளாக வழங்க வேண்டிய பயிர் காப்பீடு தொகையை அளிக்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட

மூன்று ஆண்டுகளாக வழங்க வேண்டிய பயிர் காப்பீடு தொகையை அளிக்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழக முதல்வருக்குச் சங்கச் செயலர் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் அனுப்பியுள்ள மனு:
கடந்த 2018-- 19 ஆம் ஆண்டு சம்பா, தாளடி சாகுபடி அறுவடை கடந்த பிப்ரவரி இறுதியில் நிறைவடைந்து, கொள்முதல் மார்ச் மாதத்திலேயே முடித்துவிட்டன. இந்நிலையில், கடந்த 2018-- 19 ரபி பருவத்துக்கான பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மகசூலை கணக்கிட்டு நெல் வயல்களில் சோதனை அடிப்படை ஆய்வுகள் பிப்ரவரி இறுதியில் நியூ இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம், வேளாண்மைத் துறை, புள்ளியியல் துறை, வருவாய் துறை ஒருங்கிணைப்பில் முடித்து அறிக்கையும் தயார் செய்யப்பட்டுவிட்டன.
இருப்பினும் பயிர் காப்பீடு செய்திருந்த நியூ இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் 75 நாட்களுக்கு மேலாகியும் கிராம வாரியாக எத்தனை சதவீதம் மகசூல் பாதிப்பு என்பதையும், அதற்கான இழப்பீட்டுத் தொகை எவ்வளவு என்பதையும் இதுவரை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.
காவிரி டெல்டா மாவட்டங்களில், கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பால், அனைத்து பயிர்களும், மரங்களும் சேதமடைந்தன. அப்போது சாகுபடி செய்திருந்த பயிர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டு, மகசூல் இழப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் அப்போது பிரதம மந்திரியின் காப்பீட்டு திட்டத்தில் மத்திய மாநில அரசுகளின் அறிவுரையின்படி, 95 சதவீத விவசாயிகள், பயிர் பாதிப்பு குறித்து வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்திலும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும், கடன் பெறாத விவசாயிகள் இ - சேவை மையங்களிலும் காப்பீடு செய்து செய்துள்ளனர்.
மேலும் 2016 - 17 , 2017 - 18 ஆம் ஆண்டு பருவங்களில் பயிர் காப்பீடு செய்து பாதிக்கப்பட்ட பயிர் மகசூல் இழப்புக்கு இழப்பீட்டுத் தொகை 8 சதவீதம் இதுவரை துல்லியமாக அறிவிக்கப்படவில்லை. அறிவிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் அறிவிக்கப்பட்ட சதவீதத்தை விட குறைவான தொகையே அதுவும் அரைகுறையாக வழங்கப்பட்டது.
மேலும் பல தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் இழப்பீட்டு தொகையில் மோசடி செய்துள்ளதாக, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண்மைத் துறை அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டங்கள் விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்டு எந்தப் பயனும் இல்லை.
இந்நிலையில், தமிழக அரசுக்கும், நியூ இந்தியா காப்பீட்டு நிறுவனத்துக்கும் எதிராக தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 6 பொது நல வழக்குகள் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடுக்கப்பட்டுள்ளன. எனவே 2018-- 19 ஆம் ஆண்டு இழப்பீட்டுத் தொகையையும், 2016 -17, 2017-18 ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்டிருக்க வேண்டிய நிலுவைத் தொகையையும் காலதாமதம் இல்லாமல், உரிய வட்டியுடன் உடனே வழங்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com