சுடச்சுட

  

  மேட்டூர் அணை திறக்கப்படாததைக் கண்டித்து  கல்லணையில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

  By DIN  |   Published on : 13th June 2019 09:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படாததைக் கண்டித்து தஞ்சாவூர் மாவட்டம், கல்லணையில் தென்னிந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் புதன்கிழமை ஊற்று வெட்டி விதை நெல் தெளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட வேண்டும். ஆனால், தமிழகத்துக்கு விட வேண்டிய தண்ணீரை கர்நாடகம் தராததால், அணையில் நீர்மட்டம் மிகவும் குறைவாக உள்ளது. இதனால், தொடர்ந்து 8 ஆம் ஆண்டாக மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை. 
  இதற்குக் காரணமான மத்திய அரசு, தமிழக அரசு, கர்நாடக அரசு ஆகியவற்றைக் கண்டித்து கல்லணையில் ஊற்று வெட்டி விதை நெல் தெளிக்கும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
  காவிரி தமிழ்த் தேச விவசாயிகள் சங்கம், தமிழக புரட்சிகர விவசாயிகள் சங்கம், நமது மக்கள் கட்சி விவசாயிகள் சங்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய தென்னிந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இப்போராட்டத்துக்குக் காவிரி தமிழ்த் தேச விவசாயிகள் சங்கத் தலைவர் எம்.ஆர். சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
  இவர்களை தோகூர் போலீஸார் தடுத்து நிறுத்தினர். என்றாலும், தடையை மீறி ஆற்றுக்குள் இறங்கிய விவசாயிகள் மணலில் படுத்து உருண்டு, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். மேலும், காவிரி நீர் ஒழுங்குமுறை ஆணையத்தை அமைத்து, உடனடியாக குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரியின் குறுக்கே கர்நாடகத்தில் தடுப்பணையைக் கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது. குறுவை சாகுபடியை முற்றிலும் இழந்துள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 20,000-ம், விவசாயத் தொழிலாளர்களுக்கு குடும்பத்துக்கு ரூ. 10,000-ம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
  பின்னர், இவர்களை போலீஸார் அப்புறப்படுத்தினர். இதையடுத்து, தோகூர் மாதா கோயில் தெருவில் உள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் பங்கேற்ற ஆட்சியர் ஆ. அண்ணாதுரையைக் கூட்டமைப்பினர் சந்தித்து முறையிட்டனர். அப்போது, ஆட்சியரின் காலில் விழுந்து கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
  இப்போராட்டத்தில் நமது மக்கள் கட்சி மாநில விவசாய அணி தலைவர் என். குணசேகரன், காவிரி தமிழ்த் தேச விவசாயிகள் சங்கப் பொதுச் செயலர் பொன். ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai