பேராவூரணி,சேதுபாவாசத்திரம் ஒன்றியங்களில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு: துரிதமாக நிறைவேற்ற ஆட்சியர் உத்தரவு

பேராவூரணி , சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை

பேராவூரணி , சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை ஆட்சியர் ஆ. அண்ணாதுரை செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம், பள்ளத்தூர் ஊராட்சியில் வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 1.89 லட்சம் மதிப்பீட்டில் மா, பலா, மாதுளை உள்ளிட்ட பழக்கன்றுகள் நடப்பட்டு வருவதை பார்வையிட்ட ஆட்சியர்,  வேலைக்கான வருகைப் பதிவேட்டை ஆய்வு செய்து, வேலை செய்பவர்களிடம் ஊதியம் முறையாக வழங்கப்படுகிறதா, ரேஷன் கடைகளில் பொருள்கள் தட்டுப்பாடின்றி  வழங்கப்படுகிறதா என  கேட்டறிந்தார். 
தொடர்ந்து ஆண்டிக்காடு ஊராட்சியில் தொகுப்பு வீடுகள் பழுது பார்த்தல்  2018 -19 திட்டத்தின் கீழ் உதயம் உடையான் கிராமத்தில் தலா ரூ. 50 ஆயிரம் வீதம், ரூ 7 லட்சம் மதிப்பீட்டில் 14 வீடுகள் பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்று  வருவதையும்,  அப்பகுதியில் ரூ 8.3 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டட பணி நடைபெற்று வருவதையும் பார்வையிட்டார்.  இரண்டாம் புலிக்காடு ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ 1.7 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டுமான பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு  பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்.  பின்னர்,  குருவிக்கரம்பை ஊராட்சியில் முருகானந்தம் சுப்பையா என்பவரது தென்னந்தோப்பில் கஜா புயலால் சாய்ந்த தென்னை மரங்களுக்கு பதிலாக வேளாண்மைத்துறை சார்பில் புதிதாக வழங்கப்பட்ட தென்னங்கன்றுகள்,  வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடப்பட்டு வருவதை பார்வையிட்டார். மருங்கப்பள்ளம் ஊராட்சியில் தன்னிறைவு திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும், திருமண மண்டபத்தையும் பார்வையிட்டார். 
இதைத் தொடர்ந்து,  பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் களத்தூர் ஊராட்சி நாடங்காடு பகுதியில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி  2018- 19 -ன் கீழ்  ரூ. 19.20 லட்சத்தில் கட்டப்பட்டு வருவதையும், செருவாவிடுதி தெற்கு ஊராட்சியில் ரூ. 82.20 லட்சத்தில் கிழக்கு ஆற்றங்கரை சாலை  மேம்படுத்தப்பட்டு வருவதையும், ரூ. 1.8 லட்சத்தில் தடுப்புச் சுவர் கட்டப்பட்டு வருவதையும்  ஆட்சியர் ஆய்வு செய்தார். 
ஆய்வின்போது,  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேதுபாவாசத்திரம் கோவிந்தராஜன், கிருஷ்ணமூர்த்தி, பேராவூரணி சடையப்பன், செல்வம், உதவி செயற்பொறியாளர் கருப்பையா, உதவி பொறியாளர்கள் அருண், சுரேஷ், பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com