காரைக்குடி-திருவாரூர் ரயில் தடத்தில் அனைத்து ரயில்வே கேட்டுகளுக்கும் உடனடியாக நிரந்தரப் பணியாளர்களை நியமிக்க கோரிக்கை
By DIN | Published On : 14th June 2019 09:28 AM | Last Updated : 14th June 2019 09:28 AM | அ+அ அ- |

காரைக்குடி-திருவாரூர் ரயில் வழித்தடத்திலுள்ள அனைத்து ரயில்வே கேட்டுகளுக்கும் உடனடியாக நிரந்தரப் பணியாளர்களை நியமிக்க வேண்டுமென பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, அச்சங்கத்தின் தலைவர் என். ஜெயராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் மத்திய ரயில்வே துறை அமைச்சர், ரயில்வே போர்டு தலைவர் மற்றும் தஞ்சாவூர், ஸ்ரீபெரும்புதூர், நாகப்பட்டினம், சிவகங்கை, மயிலாடுதுறை, ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர்கள் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பது:
ஜூன் 1ஆம் தேதி முதல் திருவாரூரில் இருந்து காரைக்குடிக்கும், மறு மார்க்கத்தில் காரைக்குடியிலிருந்து இருந்து திருவாரூருக்கும் தினசரி ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தில் 6 நாள்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், திருவாரூர்-காரைக்குடி இடையே உள்ள ரயில்வே கேட்டுகளுக்கு நிரந்தர பணியாளர்கள் நியமிக்கப்படாததால் மொபைல் கேட் கீப்பர் மூலம் ரயில் இயக்கப்பட்டது.
இதனால் முதல் நாளே சுமார் 150 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க பயண நேரம் 9 மணி நேரத்திற்கு மேல் ஆனதால் இரு முனைகளிலிருந்தும் அறிவித்தப்படி ரயில்களை இயக்க முடியவில்லை.
இதன்காரணமாக, இத்தடத்தில் பயணிகள் டெமு ரயில் வாரத்தில் 6 நாள்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இனி, வாரத்தில் 3 நாள்கள் மட்டுமே இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, ஜூன் 12 முதல், வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாள்களில் திருவாரூரிலிருந்து காலை 8.15 மணிக்கு புறப்பட்டு, மாலை 4.15 மணிக்கு காரைக்குடி சென்றடையும் என்றும், செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாள்களில் காரைக்குடியில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்பட்டு, மாலை 5.45 மணிக்கு திருவாரூர் வந்தடையும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த ரயில் சேவையால், பொதுமக்களுக்கோ, ரயில்வே நிர்வாகத்திற்கோ எந்தவகையிலும் பயனில்லை.
பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டம் எவ்வித பயனுமின்றி இருப்பது ரயில் பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆகையால், இவ்வழித்தடத்தில் உள்ள அனைத்து ரயில்வே கேட்டுகளுக்கும் உடனடியாக நிரந்தரமாக முழுநேர பணியாளர்களை நியமித்து ரயில் சேவைகளை முறையாக இயக்க வேண்டும்.
இத்தடத்தில் காரைக்குடி-மயிலாடுதுறைக்கு தினசரி பயணிகள் ரயில்களையும், ராமேசுவரம் - சென்னைக்கு பகல் நேர விரைவு ரயிலையும், காரைக்குடி-சென்னைக்கு இரவு நேர
விரைவு ரயிலையும் தினசரி இயக்க வேண்டும்.
தென் மாவட்டங்களிலிருந்து நாகூர், வேளாங்கண்ணி, காரைக்கால் பகுதிகளுக்கு தினசரி ரயில் சேவைகளை ஏற்படுத்த வேண்டும்.
சென்னை - செங்கோட்டை இடையே இவ்வழிதடத்தில் அந்தியோதயா விரைவு ரயிலை இயக்க வேண்டும்.
மேலும், இத்தடத்திலிருந்து வடமாநிலங்களுக்கு (வாராணசி, அஹமதாபாத், புதுதில்லி வழியாக) வாராந்திர ரயில்களை இயக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.