தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம்: முதன்மைக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்
By DIN | Published On : 14th June 2019 09:39 AM | Last Updated : 14th June 2019 09:39 AM | அ+அ அ- |

தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தடுக்க வலியுறுத்தி தஞ்சாவூர் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன் இந்திய மாணவர் சங்கத்தினர் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும். அரசுப் பள்ளிகளைப் பாதுகாத்து, அதன் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். அரசு அங்கீகாரம் இன்றி செயல்படும் தனியார் பள்ளிகளை இழுத்து மூட வேண்டும். கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை 25 சதவீதம் அனைத்து தனியார் பள்ளிகளிலும் முழுமையாக அமல்படுத்த வேண்டும். கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 25 சதவீத அடிப்படையில் சேர்த்த மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். ஆசிரியர் காலிப் பணியிடத்தை நிரப்ப வேண்டும். கல்வி உதவித்தொகையைக் கூடுதலாக வழங்க வேண்டும். 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குச் சத்துணவு திட்டத்தை ஏற்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டத்தை நடத்தினர்.
அப்போது, அலுவலக வளாகத்துக்குள் நுழைய முயன்ற இந்திய மாணவர் சங்கத்தினரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால், இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, சங்கத்தின் மாவட்டச் செயலர் ஜி. அரவிந்த்சாமி உள்பட 26 பேரை போலீஸார் கைது செய்தனர்.