தஞ்சாவூர்: நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி அருகிலுள்ள நாங்கூரில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் மேற்கொள்ளும் தொல்லியல் அகழாய்வில் சங்ககாலச் சான்றுகள் வெளிப்பட்டுள்ளன.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகக் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை இணைப் பேராசிரியர் வீ. செல்வகுமார் தலைமையில்,நாங்கூரில் பல்கலைக்கழக நல்கைக்குழு நிதி உதவியுடன் அகழாய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதுகுறித்து இணைப் பேராசிரியர் செல்வகுமார் தெரிவித்திருப்பது: நாங்கூர், ஒரு சங்ககால வாழ்விடம். நாங்கூர் குறித்த குறிப்புகள் பட்டினப்பாலையிலும், பொருநராற்றுப்படையிலும் இடம்பெற்றுள்ளன. நாங்கூர் வேள் சங்ககாலத் தலைவராவார். சங்ககாலச் சோழ அரசன் கரிகாலன், நாங்கூர் வேளின் பெண்ணை மணந்ததாகக் குறிப்பிடும் ஒரு செய்தியும் உள்ளது.
தாய்லாந்தில் உள்ள தாக்குவா பகுதியில் கிடைத்த, ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த, தமிழ்க் கல்வெட்டு, நாங்கூருடையான் என்பவர் அங்கு ஒரு குளம் வெட்டி அதை மணிக்கிராமத்தார் என்ற வணிகக்குழுவின் மேற்பார்வையில் விட்டமையைத் தெரிவிக்கிறது.
அக்கல்வெட்டு கூறும் நாங்கூருடையான் என்பவர், சீர்காழிக்கு அருகில் உள்ள இந்த நாங்கூரைச் சேர்ந்தவர் என ஊகிக்கலாம். நாங்கூர் பகுதியில், பதினோரு வைணவ திவ்ய தேசத் தலங்கள் உள்ளன. இங்கு, பல சிவன் கோயில்களும், சோழர், பாண்டியர் கல்வெட்டுகளும் உள்ளன. இக்கோயில்களின் திருவிழாக்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர். இடைக்காலத்தில் நாங்கூர் ஒரு நாட்டுப் பிரிவாக இருந்தது. காவிரிப்பூம்பட்டினம், நாங்கூர் நாட்டின் கீழ் இருந்தது. காவிரிப்படுகைப் பகுதியில் நாடு உருவாக்கம், வாழ்விடங்களின் வரலாற்றை அறிவதற்காக இந்திய அரசின் தொல்லியல்துறை அனுமதியுடன் நாங்கூரில் தற்போது அகழாய்வு நடத்தப்படுகிறது. மே மாதத்தில் தொடங்கி தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் தொல்லியல் அகழாய்வுகளில், சங்ககாலம் முதல் நவீன காலம் வரையிலான தொல்லியல் சான்றுகள் வெளிப்பட்டுள்ளன. கறுப்பு சிவப்பு, கறுப்பு, சிவப்பு பானை வகைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மீன் உருவம் உள்ள பானையோட்டுக் கீறல் குறியீடு கிடைத்துள்ளது. மேலும், இரும்புப்பொருள்கள் செய்யும் கொல்லர் பட்டறையின் சான்றுகளும் வெளிப்பட்டுள்ளன. இடைக்காலத்தின் கூறைஓடுகள் கிடைத்துள்ளன. சுடுமண்பொம்மைகள், சுடுமண் முத்திரைப் பதிவுகள், சுடுமண் தாயம், கண்ணாடி மணிகள், கல் மணிகள் போன்றவை அகழாய்வில் வெளிப்பட்டுள்ளன. இங்கு, வாழ்விடச் சான்றுகள் மூன்று மீட்டர் ஆழத்துக்கும் மேல் கிடைக்கின்றன. இந்த அகழாய்வு, நாங்கூர் ஒரு சிறப்பான சங்ககால ஊர் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
பிற்காலத்தில் திவ்ய தேசங்களாகவும், தேவாரத் திருத்தலங்களாகவும் அறியப்படுகிற இடங்கள், ஊர்கள் எனும் வளர்ச்சி பெற்ற நிலையை இரும்புக் காலத்திலேயே எட்டியிருந்தன என்பதை அறிய முடிகிறது. மூதூர் எனப்படும் சங்ககால ஊர்கள் பலவும், நாடுகள் எனப்படும் தலைமையிடங்களாக உருவாயின.
காவிரிப்படுகைப் பகுதியின் ஊர்கள் உருவாக்கம், நாடுகளின் தோற்றம் மற்றும் வேளாண்மையின் தொடக்கம் குறித்த தரவுகள் கொண்டு, விரிவான ஆய்வுக்கு இந்த அகழாய்வு இட்டுச் செல்லும். இவ்வூரின் வரலாற்றுச் சிறப்பை ஆழமாக அறிய மேலும் ஆய்வுகள் நடத்தப்படவேண்டிய தேவை எழுந்துள்ளது என்றார் செல்வகுமார். இந்த அகழாய்வில் தமிழ்ப் பல்கலைக்கழகம், மதுரை லேடி டோக் கல்லூரி, திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம், சென்னை கிறிஸ்தவக் கல்லூரி, மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி, சென்னைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, இந்த அகழாய்விவைப் பார்வையிட்ட தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கோ. பாலசுப்ரமணியன் கூறுகையில், தமிழ்ப் பல்கலைக்கழகம், தமிழர்களின் வரலாற்றையும் பண்பாட்டையும் வெளிக்கொணர இதுபோன்ற பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றார் அவர்.
தரங்கம்பாடி டேனிஷ் வரலாற்றை ஆய்வு செய்யும் அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியர் மார்க் ஹெüசெர், ஒப்பீட்டாய்வுக்காக அகழாய்வு இடத்தைப் பார்வையிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.