ஆற்றில் மணல் எடுப்பதைத் தடுக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 18th June 2019 08:42 AM | Last Updated : 18th June 2019 08:42 AM | அ+அ அ- |

தஞ்சாவூர் அருகே வெண்ணாற்றில் மணல் எடுப்பதைத் தடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர்.
ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத் துணைத் தலைவர் கக்கரை ஆர். சுகுமாரன் தலைமையில் கூடலூர் கிராம மக்கள் அளித்த மனு:
கூடலூர் தடுப்பு அணைக்கு மேல் புறம் 20 அடி ஆழத்துக்கு சுமார் 50 மாட்டு வண்டிகளிலும், லாரிகளிலும் 3 மாதங்களாக மணல் அள்ளி வருகின்றனர். இந்த நிலைமை நீடித்தால் விவசாயத்துக்கு ஆற்றில் தண்ணீர் வரும் நேரத்தில் வெண்ணாற்றின் வட கரை உடைப்பு எடுத்து 30 கிராமங்கள் அழிந்துவிடும் நிலை உள்ளது. இதுதொடர்பாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் ஏ.கே.ஆர். ரவிச்சந்தர் அளித்த மனுவில் தெரிவித்திருப்பது:
பிரதம மந்திரியின் விவசாயிகள் கெளரவ ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தில் தேர்தல் அறிவிப்பால் விண்ணப்பம் வழங்குவது நிறுத்தப்பட்டது. இதுவரை விண்ணப்பித்த விவசாயிகளுக்கும் முதல் தவணை ரூ. 2,000 வழங்கப்படவில்லை. தேர்தல் முடிந்த பிறகும் விவசாயிகளிடமிருந்து மீண்டும் விண்ணப்பம் பெறப்படவில்லை. பல கிராம நிர்வாக அலுவலர்களிடம் விண்ணப்பப் படிவம் இல்லை. எனவே, இதற்கான காலக்கெடுவை ஜூலை இறுதி வரை நீட்டிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்து மக்கள் கட்சி நிர்வாகி தற்கொலை முயற்சி: இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயலர் பி. கார்த்திக்ராவ் போன்ஸ்லே ஆட்சியரக வளாகத்தில் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதைப் பார்த்த போலீஸார் மண்ணெண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்து, அவரை ஆட்சியரிடம் அழைத்து சென்றனர். அப்போது, ஆட்சியரிடம் தஞ்சாவூர் கீழவாசல் வண்ணான் துறை பகுதியில் சலவைத் தொழில் செய்து வரும் மக்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருவதாகவும், அங்கு வாழும் மக்களைச் சிலர் மிரட்டி வருவதாகவும், அந்த இடத்தை ரியல் எஸ்டேட் மூலம் விற்பனை செய்வதற்குச் சிலர் முயற்சிப்பதாகவும் முறையிட்டார். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களிடம் ஆட்சியர் உத்தரவிட்டார்.