கோயில் அருகே மதுக்கடை: அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 23rd June 2019 04:14 AM | Last Updated : 23rd June 2019 04:14 AM | அ+அ அ- |

திருநாகேஸ்வரம் ராகு கோயில் அருகே அமைந்துள்ள அரசு மதுக் கடையை உடனடியாக அகற்றக் கோரி பல்வேறு இயக்கங்கள் சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருநாகேஸ்வரத்தில் நவக்கிரகக் தலமான ராகு கோயில் மற்றும் தென்னகத் திருப்பதி என அழைக்கப்படும் உப்பிலியப்பன் கோயில் அருகில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்தக் கடைக்கு வரும் மதுப்பிரியர்களால் நாள்தோறும் பொதுமக்களுக்கும், பெண்களுக்கும் பலவித இடையூறுகள் ஏற்படுவதால் இந்தக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என பாமக, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தும் அந்தக் கடை அகற்றப்படவில்லை.
இந்நிலையில், திருநாகேஸ்வரம் பெரியார் சிலை அருகே டாஸ்மாக் கடையை அகற்ற கோரியும், திருநாகேஸ்வரத்தில் 24 மணி நேரமும் நடக்கும் மது விற்பனையை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது. பாமக முன்னாள் நகரச் செயலர் நா. தமிழ்மணி தலைமை வகித்தார். பாமக முன்னாள் மாநில துணைத் தலைவர் ம.க. ஸ்டாலின் கண்டன உரையாற்றினார். இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச் செயலர் டி. குருமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் திருநாகேஸ்வரம் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 150 பெண்கள் உள்ளிட்ட 300 பேர் கலந்து கொண்டனர்.