மழைக்காக அதிராம்பட்டினத்தில் சிறப்புத் தொழுகை
By DIN | Published On : 23rd June 2019 04:15 AM | Last Updated : 23rd June 2019 04:15 AM | அ+அ அ- |

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சனிக்கிழமை சிறப்புத் தொழுகை நடத்தினர்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக நிலவும் கடும் கோடை வெப்பம், தண்ணீர் தட்டுப்பாடு ஆகியவற்றின் காரணமாக பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், அதிராம்பட்டினத்தில் தவ்ஹீத் ஜமாஅத் கிளை-1 சார்பில், ஈஸ்ட் கோஸ்ட் சாலை பிலால் நகர் கிராணி திடலில், மழை பெய்ய வேண்டி சிறப்புத் தொழுகை சனிக்கிழமை காலை நடைபெற்றது. இதில் பெண்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
தொழுகையை, அவ்வமைப்பின் மாநிலப் பேச்சாளர் மவ்லவி அசரப்தீன் பிர்தௌசி நடத்தினார். முன்னதாக, தொழுகையாளிகள் ஒவ்வொருவரும் தான் அணிந்திருக்கும் சட்டையை திருப்பி அணிந்துகொண்டு தொழும் படியும், மழை பெய்ய வேண்டி இறைவனிடம் இரு கைகளின் புறங்கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்யும்படியும் அறிவுறுத்தினார்.
தொழுகையின்போது, தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை நீங்கவும், கோடை வெப்பத்தின் தாக்கம் குறைந்து மழை பெய்ய வேண்டியும், அனைத்து சமுதாய மக்களும் துயரின்றி ஒற்றுமையுடன் மதநல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை போற்றும் வகையில் எந்நாளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி தொழுகையில் பங்கேற்ற ஒவ்வொருவரும் தனித்தனியே பிரார்த்தனை செய்தனர்.