மல்லிப்பட்டினத்தில் மீன்பிடி துறைமுகம் திறப்பு: காணொலியில் முதல்வர் திறந்து வைத்தார்
By DIN | Published On : 25th June 2019 08:40 AM | Last Updated : 25th June 2019 08:40 AM | அ+அ அ- |

பேராவூரணி அருகே மல்லிப்பட்டினத்தில் ரூ. 60 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய மீன்பிடி துறைமுகத்தை திங்கள்கிழமை சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.
துறைமுகம் மறுசீரமைப்பு மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ், மல்லிப்பட்டினத்தில் படகு அணையும் துறை, படகு பழுதுபார்க்கும் தளம், நிர்வாக அலுவலக கட்டடம், மீன் ஏலக் கூடங்கள் 2, வலை பின்னும் கூடங்கள் 2, முப்பதாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இரண்டு, சிமெண்ட் சாலைகள், மழைநீர் வடிகால்கள், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், துறைமுகப் பகுதியில் தூர்வாரும் பணி ஆகியவை இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், துறைமுகத்தில் 213 விசைப்படகுகளும், 102 வல்லம் படகுகளும், 967 பாரம்பரிய மீன்பிடி படகுகளும் நிறுத்தம் செய்வதற்கு வகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 4,249 மீனவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெறுவர்.
புதிய மீன்பிடி துறைமுகம் மூலம் மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு தேவையான உபகரணங்களை இலகுவாக ஏற்றுவதற்கும், பிடித்து வரப்பட்ட மீன்களை இலகுவாக கையாள்வதற்கும், மீன்களை சுகாதாரமான முறையில் விற்பனை செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்பாடு அடையும். மீன்களை ஏற்றுமதி செய்ய வழி செய்யப்பட்டு உள்ளதால், அரசுக்கான வருவாய் கணிசமான அளவில் பெருகும். துறைமுகம் அமைந்துள்ள பகுதியில் வேலை வாய்ப்பு ஏற்படும்'' என மீன்வளத் துறையினர் தெரிவித்தனர்.
மல்லிப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேராவூரணி எம்எல்ஏ மா.கோவிந்தராசு, பட்டுக்கோட்டை எம்எல்ஏ சி.வி.சேகர், ஒன்றியச் செயலாளர்கள் சேதுபாவாசத்திரம் நாடியம் சிவ. மதிவாணன், கூட்டுறவு சங்கத் தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன், மீன்வளத்துறை உதவி இயக்குநர் சிவகுமார், மீன்வளத் துறை ஆய்வாளர் கெங்கடேஸ்வரி, சேதுபாவாசத்திரம் காவல்துறை ஆய்வாளர் வீர. அண்ணாதுரை, மல்லிப்பட்டினம் ஜமாத் தலைவர் அல்லாபிச்சை மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும் என்ற மீனவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்படுவதாகக் கூறி, தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில பொதுச்செயலாளர் தாஜூதீன், தலைமையில் மீனவர்கள் துறைமுக திறப்பு விழாவை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதுகுறித்து மீன்வளத்துறை அமைச்சர், முதல்வரிடம் பேசி இருப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பேராவூரணி எம்எல்ஏ மா.கோவிந்தராசு கூறியதையடுத்து, புறக்கணிப்பை கைவிட்டு மீனவர்கள் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.