சுடச்சுட

  

  தற்போதுள்ள காவிரி ஆணையத்தை கலைத்துவிட்டு, புதிய ஆணையம் அமைக்க வேண்டும் என காவிரி உரிமை மீட்புக் குழு வலியுறுத்தியுள்ளது.
  இதுகுறித்து குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தெரிவித்தது:
  புதுதில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையம் வழக்கம்போல ஆசை வார்த்தையைக் கூறி தமிழ்நாட்டை ஏமாற்றிவிட்டது. கடந்த மே 28ஆம் தேதி கூடிய மேலாண்மை ஆணையம் ஜூன் மாதத்துக்கு 9.19 டி.எம்.சி. தண்ணீரை தமிழ்நாட்டுக்குக் கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என ஆணையிட்டது. 
  ஆனால், அந்த ஆணையைக் கர்நாடகம் செயல்படுத்தவில்லை. கர்நாடகத்திலிருந்து காவிரியில் கலந்த சாக்கடை கழிவு நீரை கணக்கில் எடுத்து 1.8 டி.எம்.சி தண்ணீர் திறந்து விட்டதாக ஆணையம் கூறுகிறது.
  இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காவிரி ஆணையத் தலைவர் மசூத் உசேன்,  ஜூன் மாதத்துக்கான பாக்கித் தண்ணீரையும் ஜூலை மாதத்துக்குரிய 31.3 டி.எம்.சி தண்ணீரையும் தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் திறந்துவிட ஆணையிட்டதாகக் கூறினார். கடந்த கூட்டத்தில் அவர் வெளியிட்ட ஆணை செயல்படுத்தபடவில்லை என்ற சிறு கூச்சம் கூட இல்லாமல் ஜூலை மாதத்துக்குரிய தண்ணீரைக் கர்நாடகம் திறந்துவிடும் என்று கூறுகிறார். 
  ஓய்வு நேரப் பணியாக மசூத் உசேன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த மறுத்து வருகின்றன. 
  எனவே, இப்போது உள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தையும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவையும் கலைத்துவிட்டு, செயல்படுத்தும் அதிகாரமுள்ள முழுநேரப் பணியாகப் புதிய காவிரி மேலாண்மை ஆணையத்தையும், புதிய ஒழுங்காற்றுக் குழுவையும் அமைக்க வேண்டும் என்றார் மணியரசன்.
  ஆணையம் பொறுப்பேற்க வேண்டும்: 
  இதேபோல, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலர் சாமி. நடராஜன் தெரிவித்தது:
  கர்நாடகம் ஜூன், ஜூலை மாதத்துக்குரிய தண்ணீரை தருமாறு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு போட்டாலும், அதைச் செயல்படுத்துவது யார் என்ற கேள்வி எழுகிறது. கடந்த கூட்டத்தில் ஆணையம் பிறப்பித்த உத்தரவை கர்நாடகம் செயல்படுத்தவில்லை. எனவே, ஆணையம் வெறும் உத்தரவு மட்டும் பிறப்பிக்கக் கூடாது. கர்நாடகத்தில் உள்ள அணையைத் திறக்கும் பொறுப்பையும் ஆணையம் ஏற்க வேண்டும். 
  தமிழகத்துக்கு எவ்வளவு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்கிற மாத வாரியான அளவை ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதை மீண்டும் கூறுவதைவிட, நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையை ஆணையம் மேற்கொள்ள வேண்டும் என்றார் நடராஜன்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai