இன்று கிராமசபைக் கூட்டம்; ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக மனு கொடுக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 28th June 2019 09:06 AM | Last Updated : 28th June 2019 09:06 AM | அ+அ அ- |

தஞ்சாவூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 28) நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மனு அளித்து தீர்மானம் நிறைவேற்றுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் என்.வி. கண்ணன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் கே. பக்கிரிசாமி தெரிவித்திருப்பது:
மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் இக்கூட்டத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது. காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது தொடர்பாக கிராம மக்கள் மனு அளித்து, தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்த வேண்டும்.