சுடச்சுட

  

  மக்களவைத் தேர்தல் தொடர்பான விளம்பரங்களுக்கு முன் அனுமதி பெற வேண்டும் என்றார் ஆட்சியர் ஆ. அண்ணாதுரை.
  ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்களவைத் தேர்தல் தொடர்பாக தனியார் உள்ளுர் தொலைக்காட்சி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்தான கலந்தாலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியது:
  உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனங்கள், தேர்தல் தொடர்பான விளம்பரங்களை உரிய முன் அனுமதியில்லாமல் ஒளிப்பரப்பக் கூடாது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் ஊடகச் சான்று குழுவின் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெற்ற பின்பே விளம்பரங்கள், சிறு விளம்பரங்களை ஒளிபரப்ப வேண்டும். விளம்பரத்துக்குரிய கட்டணங்களைத் தேர்தல் பிரிவுக்குத் தெரிவிக்க வேண்டும். செலவின தேர்தல் பார்வையாளர் ஆய்வு மேற்கொள்ளும்போது உரிய தகவல்களை வழங்க வேண்டும்.  
  அனைத்து தனியார் உள்ளுர் கேபிள் தொலைக்காட்சி சேனல்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.  திருமணம், பிறந்த நாள் வாழத்துகளில் கட்சி தொடர்பாகவோ, வேட்பாளர்களை முன்னிறுத்தியோ ஒளிப்பரப்பப்பட்டால், அதற்கான கட்டணங்களும் வேட்பாளருடைய தேர்தல் செலவில் கணக்கிடப்படும். உரிய அனுமதியின்றி நேரடி ஒளிபரப்பு மற்றும் வாசகர்கள் கேள்வி பதில் போன்றவற்றில் வேட்பாளர் தொடர்பான கேள்வி பதில்களோ அல்லது அரசியல் கட்சி சம்பந்தமான கேள்வி பதில்களோ இடம் பெறக்கூடாது.  
  மேலும், அனைவரும் வாக்களிக்கும் விதமாக தேர்தல் ஆணையம் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் வெளியிட்டுள்ள விளம்பரங்களை அவ்வப்போது உள்ளூர் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒளிபரப்பி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 
  அரசியல் கட்சி மற்றும் வேட்பாளர்கள் விளம்பரங்களை ஒளிபரப்பக் கொடுக்கும் கட்டணங்களைக் காசோலை அல்லது வரைவு காசோலையாக மட்டும் பெற வேண்டும் என்றார் ஆட்சியர். கூட்டத்தில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் போ. சுருளி பிரபு, அரசு கேபிள் டிவி வட்டாட்சியர் மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai