சுடச்சுட

  

  பொள்ளாச்சி சம்பவத்தைக் கண்டித்து மகளிர், மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

  By DIN  |   Published on : 16th March 2019 09:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பொள்ளாச்சி சம்பவத்தைக் கண்டித்து தஞ்சாவூரில் மகளிர் அமைப்பினர், மாணவர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு இந்திய தேசிய மாதர் சம்மேளனம்,  அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் ஆகியவை சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பொள்ளாச்சியில் பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும். குற்றவாளிகள் மீது போக்சோ அல்லது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகள் மற்றும் ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாகச் செயல்படும் காவல் துறையினரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
  இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சம்மேளனத்தின் மாவட்டச் செயலர் ம. விஜயலட்சுமி தலைமை வகித்தார். 
  மாணவர் பெருமன்ற மாவட்டச் செயலர் செந்தூர்நாதன், ஏஐடியூசி மாநிலச் செயலர் சி. சந்திரகுமார், தமிழ்நாடு மாணவர் இயக்கப் பொதுச் செயலர் அருண்சோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டப் பொருளாளர் என். பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஏஐடியூசி துணைப் பொதுச் செயலர் துரை. மதிவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
  இதேபோல, மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி முன் தமிழ்நாடு மாணவர் இயக்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்குக் கல்லூரி கிளைச் செயலர் பூவரசன் தலைமை வகித்தார். இதில், ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
  வல்லம் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம் முன் மாணவிகள் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், பெண்களைப் பாலியல் வல்லுறவு செய்த அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

  பட்டுக்கோட்டையில் தமுமுக ஆர்ப்பாட்டம்
  பட்டுக்கோட்டையில் அறந்தாங்கி சாலை முக்கத்தில் தமிழ்நாடு முஸ்லீம் 
  முன்னேற்றக் கழகத்தினர் வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்து அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
  ஆர்ப்பாட்டத்துக்கு, அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை அகமது ஹாஜா தலைமை வகித்தார். மாநிலப் பேச்சாளர் திருச்சி ரபீக் கண்டன உரையாற்றினார். 
  பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தைக் கண்டித்தும், அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், பெண்களை தவறாக ஆபாச விடியோ எடுத்த குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யவும் வலியுறுத்தியும் முழக்கமிட்டனர்.

  வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்
  பொள்ளாச்சி சம்பவத்தைக் கண்டித்து பட்டுக்கோட்டையில் நீதிமன்ற வாயிலில் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. இதற்காக அனைத்து வழக்குரைஞர்களும் 1 நாள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பிலும் ஈடுபட்டனர்.
  ஆர்ப்பாட்டத்துக்கு வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.பிரகாசம்  தலைமை வகித்தார். செயலாளர் பி.என்.சற்குணம் முன்னிலை வகித்தார். இதில் வழக்குரைஞர்கள் மேரி ஜெமிலா வெற்றிக்கொடி, சாந்தகுமாரி, கண்மணி, சுசித்ரா, சுபாஷினி, கேத்தரின் ஜெனீபர், வள்ளி பார்க்கவி, ஜமுனாராணி, ஜெயவீரபாண்டியன், அண்ணாதுரை, காமராஜ், சிவா, வெங்கட் நாராயணன், தீபாகரன், நடேசன் மற்றும் வழக்குரைஞர்களின் உதவியாளர்கள் கலந்து கொண்டனர். பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

  வகுப்பை புறக்கணித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
  பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து கும்பகோணத்தில் கல்லூரி மாணவர்கள் வெள்ளிக்கிழமை வகுப்பைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  பொள்ளாச்சியில் பெண்களை மிரட்டி பாலியல் வன்முறையில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும். அவர்களை மக்கள் மன்றத்தின் முன் நிறுத்தி, தூக்கிலிடவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசு பொள்ளாச்சி பிரச்னையில் மெளனம் காப்பதைக் கண்டித்தும் 
  கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரி மாணவர்கள் வெள்ளிக்கிழமை வகுப்பைப் புறக்கணித்து, கல்லூரி வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  
  இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் தலைவர் சங்கர் தலைமையில் நீதிமன்றம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் செயலர் பாலமுருகன், பொருளாளர் கவிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai