சுடச்சுட

  

  வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த அறிவுறுத்தல்

  By DIN  |   Published on : 16th March 2019 09:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றார் ஆட்சியர் ஆ. அண்ணாதுரை.
  ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தல் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டத்தில் அவர் பேசியது:
  மண்டல அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி வழித்தடங்களைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வாக்குச்சாவடி மையங்களுக்கு விரைந்து செல்ல வசதியாக இருக்கும். 
  வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளதையும், குடிநீர் வசதி, மின்சாரம், கழிப்பறை, காற்றோட்டம் உள்ளிட்ட வசதிகள் உள்ளனவா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் வாக்குப் பதிவு கருவி மற்றும் கட்டுப்பாட்டுக் கருவியில் உள்ள அடையாள எண் மற்றும் முகவரி அட்டை அந்தந்த வாக்கு சாவடி மையங்களுக்கு உரியனவா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
  வாக்குப் பதிவு முடியும் நேரத்துக்குச் சற்று முன்னதாக வாக்கு சாவடியின் எல்லைக்கு உட்பட்டு வாக்களிக்க வந்திருக்கும் வாக்காளர்கள் வரிசைப்படி வாக்களிக்க அனுமதிக்கப்படுவர் என அறிவிக்க வேண்டும். அவ்வாறு வந்திருக்கும் நபர்களுக்கு வரிசை எண் ஒன்றிலிருந்து ஆரம்பித்து வரிசையில் நிற்கும் கடைசி வாக்காளர் வரை உங்களது முழு கையொப்பமிட்ட சீட்டை வழங்க வேண்டும். வாக்குப் பதிவு நேரம் முடிந்த பின்னரும் அவ்வாறு சீட்டு வழங்கப்பட்ட அனைத்து நபர்களுக்கும் வாக்களிக்க வாய்ப்புத் தர வேண்டும்.
  காவலர் மற்றும் பணியாளர்கள் உதவியுடன் வாக்குப் பதிவு நேரம் முடிந்த பின்னர், வேறு நபர்கள் வரிசையில் வந்து நிற்காமல் தடுக்க வேண்டும். கடைசியில் நிற்கும் நபரிடமிருந்து சீட்டு வழங்குவதை ஆரம்பித்து பின்னர் முதலில் நிற்பவர் வரை வழங்கினால், இதை சரியான முறையில் நடைமுறைப்படுத்தலாம். கடைசி வாக்காளர் வாக்களித்து முடித்தவுடன் வாக்குப் பதிவு முடிந்ததற்கான அறிவிப்பை முறைப்படி அறிவிக்க வேண்டும்,
  தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் அனைவரும் தங்களது பணிகளைக் கவனமுடன் மேற்கொள்வதுடன் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர். 
  கூட்டத்தில், கஜா மறுசீரமைப்பு மற்றும் மறுவாழ்வு கூடுதல் திட்ட இயக்குநர் ராஜகோபால் சுங்காரா, மாவட்ட வருவாய் அலுவலர் ந. சக்திவேல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பி. மந்திராசலம், கோட்டாட்சியர் சி. சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai