அணைக்கரையில் வீட்டுக்குள் புகுந்த முதலை
By DIN | Published On : 24th March 2019 03:06 AM | Last Updated : 24th March 2019 03:06 AM | அ+அ அ- |

தஞ்சாவூர் மாவட்டம், அணைக்கரை கொள்ளிடம் ஆற்றிலிருந்து வீட்டுக்குள் முதலை புகுந்தது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறை அதிகாரிகள் முதலையைப் பிடித்து ஆற்றில் விட்டனர்.
கும்பகோணம் அருகிலுள்ள அணைக்கரை பள்ளிக்கூடத் தெருவில் வசித்து வருபவர் நாகலட்சுமி. இவரது வீட்டின் பின்புறத்தில் வெள்ளிக்கிழமை இரவு சுமார் 8 அடி நீளமுள்ள முதலைபுகுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தீயணைப்புத் துறையினருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தார். திருவிடைமருதூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மாறன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் வீட்டுக்குள் புகுந்த முதலையை போராடி பிடித்து, அதை அருகிலுள்ள கொள்ளிடம் ஆற்றில் விட்டனர். அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் ஏராளமான முதலைகள் இருப்பதாகவும், தற்சமயம் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தினால் அவர் இரைத் தேடிஅருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், கொள்ளிடம் ஆற்றிலுள்ள முதலைகளை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.