Enable Javscript for better performance
விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய நடவடிக்கை: திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பேச்சு- Dinamani

சுடச்சுட

    

    விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய நடவடிக்கை: திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பேச்சு

    By DIN  |   Published on : 28th March 2019 07:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திமுக கூட்டணி வெற்றி பெற்றால் விவசாய கடன்கள், சுயஉதவிக் கடன்கள் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம்.
    பேராவூரணியில் பெரியார் சிலை அருகே செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு திமுக மாவட்டச் செயலர் துரை.  சந்திரசேகரன் தலைமை வகித்தார்.  முன்னாள் எம்எல்ஏ ஆர். சிங்காரம், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலர் மு. பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வேட்பாளர் பழனிமாணிக்கம் மேலும் பேசியது:
    எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால் விவசாய கடன்கள், சுய உதவி கடன்கள் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் . அதற்கான அறிவிப்பு தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. 2006-இல் விவசாய கடனை தள்ளுபடி செய்வோம் என திமுக கூறியபோது யாரும் நம்பவில்லை. ஆனால், செய்து காட்டினோம்.  தள்ளுபடி என்பது இலவசமல்ல; உங்களிடம் இருந்து பெறப்பட்ட வரிப்பணம் உங்களுக்கே திருப்பி வழங்கப்படுகிறது. பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நமது குழந்தைகள் அடிமை இந்தியாவில்தான் பிறப்பார்கள்.  வாக்குறுதிகளை நிறைவேற்ற மதச்சார்பற்ற  கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்றார். கூட்டத்தில் திமுக ஒன்றிய பொறுப்பாளர் க. அன்பழகன், பேரூராட்சி முன்னாள் தலைவர் என்.அசோக்குமார், முன்னாள் திமுக ஒன்றிய செயலாளர் சுப.சேகர் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

    மதுக்கூரில்.... மதுக்கூரில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் பணி மனையை திமுக வேட்பாளர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் திறந்துவைத்து பேசினார்.   
    நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ துரை.சந்திரசேகரன் தலைமை வகித்தார். ஏனாதி பாலு, கா.அண்ணாதுரை, ஆர்.இளங்கோ (திமுக), ஏ.ஆர்.எம்.யோகானந்தம், நாராயணன் (காங்கிரஸ்) பாரதிமோகன், டாக்டர் மு.செல்லப்பன் (இந்திய கம்யூ), ஆர்.சி.பழனிவேலு, சிதம்பரம் (மார்க்சிஸ்ட் கம்யூ), கோ.உதயகுமார் (மதிமுக), இளந்தென்றல் (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி), கபார் (மனித நேய மக்கள் கட்சி), அப்துல்காதர் (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்), ராவுத்தர் ஷா (மனித நேய ஜனநாயக மக்கள் கட்சி) உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

    துவரங்குறிச்சியில்... பட்டுக்கோட்டை வட்டம், துவரங்குறிச்சி முக்கூட்டுச் சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பேசுகையில், காவிரி டெல்டா பகுதியில் உள்ள ஆறு, ஏரி, குளங்களைத் தூர்வாரி தண்ணீர் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே ரூ. 200 கோடியில் செயல்படுத்தப்பட்ட கல்லணைக் கால்வாய் புனரமைப்புத் திட்டம் அடுத்த கட்டமாக ரூ. 300 கோடியில் செயல்படுத்தப்படும்.  ஜிஎஸ்டி வரி, நீட் தேர்வு ரத்துச் செய்யப்படும். புயல் நிவாரணம் கிடைக்கப் பெறாதவர்களுக்கு முறையாக நிவாரணம் வழங்கப்படும் என்றார்.    திமுக மாவட்டச் செயலர் எம்எல்ஏ துரை.சந்திரசேகரன், மதிமுக மாவட்டச் செயலர் கோ.உதயகுமார் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai