புதிய சின்னம் பெற தமாகா முயற்சி
By DIN | Published On : 28th March 2019 07:49 AM | Last Updated : 28th March 2019 07:49 AM | அ+அ அ- |

தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் கிடைக்காததால் புதிய சின்னம் பெறுவதற்கான முயற்சியை அக்கட்சியினர் மேற்கொண்டுள்ளனர்.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமாகா தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறது. இத்தொகுதியில் தனிச் சின்னத்தில் குறிப்பாக சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவோம் என தமாகா தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து, தமாகா வேட்பாளராக அக்கட்சியின் மாநிலச் செயற் குழு உறுப்பினர் என்.ஆர். நடராஜன் அறிவிக்கப்பட்டார். இவர் மார்ச் 25-ம் தேதி தாக்கல் செய்த இரு மனுக்களில் ஒரு மனுவில் சின்னம் கோரும் பத்தியை நிரப்பாமலும், மற்றொரு மனுவில் சின்னம் கோரும் முன்னுரிமை வரிசையில் ஆட்டோ ரிக்சா, கேஸ் சிலிண்டர், ஹெல்மெட் எனவும் குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் சைக்கிள் சின்னத்தை ஒதுக்கக் கோரி தமாகா தாக்கல் செய்த மனு செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, என்.ஆர். நடராஜன் மீண்டும் ஒரு வேட்பு மனுவை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார். அதில், சின்னம் தொடர்பான முன்னுரிமை வரிசையில் ஆட்டோ ரிக்சா, கேஸ் சிலிண்டர், ஹெல்மெட் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், என்ன சின்னம் என்பது வெள்ளிக்கிழமை மாலைதான் தெரிய வரும் என தமாகா வட்டாரங்கள் தெரிவித்தன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...