முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
பள்ளி செல்லாத 242 குழந்தைகள் கல்வி நிலையங்களில் சேர்ப்பு
By DIN | Published On : 15th May 2019 08:40 AM | Last Updated : 15th May 2019 08:40 AM | அ+அ அ- |

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் மூலம் பள்ளி செல்லாத 242 குழந்தைகள் கண்டறியப்பட்டு, தொடர்புடைய கல்வி நிலையங்களில் சேர்க்கப்படுகின்றனர்.
மாவட்டத்தில் பள்ளி செல்லாத குழந்தைகள் தொடர்பாக ஏப். 8-ம் தேதி கணக்கெடுப்புத் தொடங்கப்பட்டது. இதில், 2,260 கிராமப்புறக் குடியிருப்புகள், 336 பேரூராட்சிகள் வார்டுகள், 129 மாநகராட்சி, நகராட்சி வார்டுகள் ஆகியவற்றில் 165 வட்டார வள ஆசிரியப் பயிற்றுநர்கள், 15 மேற்பார்வையாளர்கள், 45 சிறப்பு ஆசிரியர்கள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதன் மூலம், 6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட 142 சிறுவர்கள், 100 சிறுமிகள் என மொத்தம் 242 பேர் பள்ளி செல்லாத குழந்தைகள் என அடையாளம் காணப்பட்டனர்.
இதில், பூதலூர் வட்டாரத்தில் உள்ள வாணரங்குடி கிராமத்தில் செங்கல் சூளையில் இருந்த 15 குழந்தைகள் கண்டறியப்பட்டனர். இவர்கள் விழுப்புரம், புதுக்கோட்டை மாவட்டங்களிலிருந்து செங்கல் சூளையில் வேலை பார்த்து வரும் தொழிலாளர்களின் குழந்தைகள் என்பது தெரிய வந்தது. இவர்கள் அனைவரும் அதே கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளியில் சேர்க்கப்பட்டனர் என ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலர் ஏ. ரமேஷ் தெரிவித்தார்.
இதேபோல, கடலோரப் பகுதியில் உள்ள மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் பகுதியில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, பள்ளிக்குச் செல்லாமல் பெற்றோருடன் இணைந்து மீன் பிடிக்கும் வேலையில் 17 குழந்தைகள் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெ. சிரில் ஆண்டனி தெரிவித்தது:
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெ. சாந்தா அறிவுறுத்தலின் பேரில் இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செங்கல் சூளைகள், மீன் பிடிப்புத் தலங்கள், நரிக்குறவர் குடியிருப்புகள் உள்ளிட்ட பகுதிகளில் இக்கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. இப்பணி புதன்கிழமையுடன் (மே 15) முடிப்பதாக இருந்தது. இதை மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இக்கணக்கெடுப்பின் மூலம், பள்ளி செல்லாக் குழந்தைகளை மீட்டு, சிறப்புப் பயிற்சி மையங்கள் உண்டு உறைவிடப் பயிற்சி பள்ளிகள் மற்றும் நேரடியாகப் பள்ளிகளில் சேர்த்து வருகிறோம்.
மேலும், பள்ளிக்குச் செல்லாத 42 மாற்றுத் திறன் படைத்த குழந்தைகளும் அடையாளம் காணப்பட்டனர். இவர்களை அந்தந்த வட்டாரத்தில் உள்ள சிறப்புப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.
கடந்த ஆண்டு மாவட்டத்தில் 477 பள்ளி செல்லாக் குழந்தைகள் மீட்கப்பட்டனர். இவர்களில் 278 பேர் சிறப்புப் பயிற்சி மையங்களிலும், 31 பேர் உண்டு உறைவிடப் பயிற்சி பள்ளிகளிலும், 168 பேர் நேரடிச் சேர்க்கை மூலம் பள்ளிகளிலும் சேர்க்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.