ஜூன் 12-இல் காவிரி நீர் திறப்புக் குறித்து உத்தரவாதம் தேவை

மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ஆம் தேதி காவிரி நீர் திறந்துவிடுவது குறித்து தமிழக அரசு உத்தரவாதம் அளிக்க

மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ஆம் தேதி காவிரி நீர் திறந்துவிடுவது குறித்து தமிழக அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றார் தமிழகக் காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலர் பி.ஆர். பாண்டியன்.
தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்ற பி.ஆர். பாண்டியன் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை விரைந்து கூட்ட வேண்டும். கர்நாடகத்திலுள்ள அணைகளின் தண்ணீர் இருப்பை கர்நாடகம், தமிழகம், கேரளத்துக்கு ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும். ஆணையம் கூடி தமிழகத்துக்கு அடுத்த கட்டமாகத் தண்ணீர் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிகழாண்டாவது குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறப்பது குறித்து விவசாயிகளுக்குத் தமிழக அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் தொடங்கி நாகை மாவட்டம் கோடியக்கரை வரை காவிரி டெல்டாவில் அழிவை ஏற்படுத்தக்கூடிய ஹைட்ரோ கார்பன் எரிவாயுத் திட்டத்துக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. நிலத்தடியில் உள்ள அனைத்துமே ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்குச் சொந்தம் என்ற அடிப்படையில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், பாறை எரிவாயு, கச்சா எண்ணெய் உள்ளிட்ட அனைத்தையும் அவர்களுக்கு உரிமையாக்கி தொகுப்பு அடிப்படையில் ஒப்பந்தப்புள்ளி கோர மத்திய அரசு மிக வேகமாக நடவடிக்கை மேற்கொள்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் காவிரி டெல்டா பாலைவனமாக மாறி பேரழிவை ஏற்படுத்தும். உடனடியாக இத்திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும்.
ஏற்கெனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விவசாயிகளைப் பாதிக்கும் மீத்தேன் உள்ளிட்ட திட்டங்கள் காவிரி டெல்டாவில் அனுமதிக்கத் தடை விதித்து உத்தரவிட்டார். ஜெயலலிதா விதித்த தடை உத்தரவை பின்பற்றுவோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். ஆனால், இப்போது முதல்வர் மெளனம் சாதிப்பதால், தமிழக மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இதுதொடர்பாக தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி தனது நிலைப்பாட்டை தமிழக விவசாயிகளுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றார் பாண்டியன். கூட்டத்தில் மாநிலத் தலைவர் த. புண்ணியமூர்த்தி,  மாவட்ட நிர்வாகிகள் என். அண்ணாதுரை, துரை. பாஸ்கரன், ரமேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com