அதிராம்பட்டினத்தில் 29 பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க 44.35 டன் பச்சரிசி ஒதுக்கீடு
By DIN | Published On : 16th May 2019 08:36 AM | Last Updated : 16th May 2019 08:36 AM | அ+அ அ- |

நிகழாண்டு புனித ரமலான் பண்டிகைக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க அதிராம்பட்டினத்தில் உள்ள 29 பள்ளிவாசல்களுக்கு 44.35 டன் (44,350 கிலோ) பச்சரிசியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
அதிராம்பட்டினத்தில் உள்ள 35- க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் புனிதமிகு ரமலான் மாதத்தில், மாலையில் நோன்பு கஞ்சி தயாரித்து பொதுமக்களுக்கும், நோன்பு கடைப்பிடிப்பவர்களுக்கும் வழங்கப்படுகிறது. இதுகுறித்து, கடந்த 14 ஆண்டுகளாக இப்பணிகளை மேற்கொண்டு வரும் பிலால் (ரலி) பள்ளிவாசல் முத்தவல்லி ஹாஜி எஸ்.எம்.ஏ.அகமது கபீர் கூறியது:
புனிதமிகு ரமலான் மாதத்தில் அரசு வழங்கும் மானிய விலை பச்சரிசியை கிலோ 1-க்கு ரூ.1 வீதம் செலுத்தி பெறுகிறோம். இவற்றை அரசு இலவசமாக வழங்க வேண்டும். அரிசியை ஏற்றி வரும் வாகனத்திற்கு வாடகை கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும். அரசின் சார்பில் அந்தந்த பள்ளிவாசல்களுக்கு நேரடியாக இலவசமாக விநியோகிக்க வேண்டும்.
நோன்பு கஞ்சி தயாரிக்க தேவைப்படும் எண்ணெய், பருப்பு வகைகள், ஜீனி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை தமிழக அரசு இலவசமாக வழங்க வேண்டும். அதேபோல், அதிகரித்து வரும் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு கூடுதலாக அரிசி வழங்க வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் பட்டியலில் விடுபட்டுள்ள அனைத்து பள்ளிவாசல்களுக்கும் அரிசி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காலதாமதத்தை தவிர்க்க ரமலான் நோன்பு தொடங்கும் 1 வாரத்துக்கு முன்னதாகவே அரிசியை விநியோகிக்க வேண்டும் என்றார்.