அறிவிக்கப்படாத மின்வெட்டு: பந்தநல்லூரில் சாலை மறியல்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள பந்தநல்லூர் பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டைக் கண்டித்து

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள பந்தநல்லூர் பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டைக் கண்டித்து விவசாயிகள், பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பந்தநல்லூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 30-க்கும் அதிகமான கிராமங்களில் 10,000-க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேலும், 500 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் உள்ளன. 30 கிராமப் பகுதிகளில் தொடர்ந்து மின் தடை ஏற்படுகிறது. அத்துடன் குறைந்த மின்னழுத்தம் பிரச்னையால் மின் சாதனங்கள் பழுதாகின்றன.
இதனால் விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட கோடை நெல் பயிர்களுக்கு பம்பு செட் உதவியுடன் தண்ணீர் பாய்ச்ச  முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் இல்லாததால் பயிர்கள் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர் மின் தடையால் வர்த்தகர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பலமுறை மின் வாரிய அலுவலகத்துக்கும், கும்பகோணம் மின் வாரிய தலைமை அலுவலகம்,  கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர்,  ஆட்சியர் கவனத்துக்குத் தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை எனக் கூறப்படுகிறது.
இதனால்,  தொடர்ந்து பந்தநல்லூர் பகுதியில் குறைந்த மின் அழுத்தத்தில் மின் விநியோகம் இருப்பதுடன், பல நேரங்களில் நீண்டநேரம் அறிவிக்கப்படாத மின் வெட்டும் ஏற்படுகிறது.
இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதியைச் சேர்ந்த 30 கிராமங்களின் மக்கள், வர்த்தகர்கள், விவசாயிகள் என 300-க்கும் அதிகமானோர் ஒன்றிணைந்து பந்தநல்லூர் மின்வாரிய இளநிலை பொறியாளர் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.  
போராட்டத்துக்கு உழவர் பேரியக்கத் மாநிலத் தலைவர் கோ. ஆலயமணி தலைமை வகித்தார். துணைத் தலைவர் கலியமூர்த்தி, விவசாய சங்கத் தலைவர் சங்கர், செயலர் முத்துசாமி, பொருளாளர் சுப்பிரமணியபிள்ளை, வர்த்தக சங்கத் தலைவர் பிச்சுமணி, பாஜக மாவட்டப் பொறுப்பாளர் ராதா, தேமுதிக ஒன்றியச் செயலர் முருகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒன்றியச் செயலர் முருகப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் போலீஸார் மற்றும் மின் வாரிய அலுவலர்கள் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடனடியாக தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அலுவலர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இப்போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com