பேராவூரணியில் வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு பயிற்சி
By DIN | Published On : 16th May 2019 08:33 AM | Last Updated : 16th May 2019 08:33 AM | அ+அ அ- |

பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி, வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.
பயிற்சி வகுப்பை உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் அ.கமலக்கண்ணன் தொடங்கி வைத்து பேசினார். வட்டாட்சியர் க. ஜெயலெட்சுமி முன்னிலை வகித்தார். தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் யுவராஜ் வாக்கு எண்ணிக்கை பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். வாக்கு எண்ணிக்கையின்போது, வாக்குப் பெட்டிகளை கையாளுவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கையின்போது ரகசியம் காக்க வேண்டும். வெளி நபர்களிடம் தொடர்பு கொள்ளாமல் இருக்க வேண்டும். அலைபேசியை பயன்படுத்தக் கூடாது. கண்ணியத்துடனும், நேர்மையுடனும் பணியாற்ற வேண்டும். விதிமீறி செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.