மக்காசோளத்தில் படைப்புழுவைக் கட்டுப்படுத்த ஆலோசனை

மக்காசோளப் பயிர்களில் காணப்படும் படைப்புழுவைக் கட்டுப்படுத்தி மகசூல் இழப்பைக்

மக்காசோளப் பயிர்களில் காணப்படும் படைப்புழுவைக் கட்டுப்படுத்தி மகசூல் இழப்பைக் குறைக்குமாறு விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
இதுகுறித்து வேளாண்மைத் துறையின் தஞ்சாவூர் உதவி இயக்குநர் ஐயம்பெருமாள் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூர் வட்டாரத்தைச் சார்ந்த குருங்குளம், திருக்கானூர்பட்டி, வல்லம், வல்லம்புதூர், இனாத்துகான்பட்டி, நா. வல்லுண்டான்பட்டு போன்ற கிராமங்களில்  கோடை மற்றும் காரீப் பருவங்களில் சுமார் 800 ஏக்கரில் மக்காசோள பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. மக்காசோளப் பயிர்களை படைப் புழுக்கள் தாக்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. மக்காச்சோள படைப் புழுவைக் கட்டுப்படுத்தி மகசூல் இழப்பைக் குறைக்கலாம்.
இப்பூச்சியானது லெபிடாப்டீரான் வகையை சேர்ந்தது. இப்பூச்சி பல்வேறு பயிர்களைத் தாக்கி அதிகப்படியான பொருளாதார சேத நிலையை ஏற்படுத்துவதால் இதற்கு படைப்புழு என பெயரிடப்பட்டுள்ளது.
இப்புழுவானது பயிர் விதைத்த 15-வது நாளிலிருந்து பயிரின் குருத்துப்பகுதியில் சேதத்தை விளைவிக்கிறது. இப்புழுக்களால் தாக்கப்பட்ட குருத்து வெளிவரும்போது சிறிய மற்றும் பெரிய வட்ட வடிவிலான துளைகள் வரிசையாகக் காணப்படும். சில செடிகளில் இலைகள் முழுவதும் உண்ணப்பட்டுவிடும். இப்புழுக்கள் கதிர்களின் நுனி மற்றும் காம்புப் பகுதிகளை உண்ணும் திறன் கொண்டது.
வாழ்க்கை சுழற்சி: தாய் அந்து பூச்சிகள் 100 - 200 முட்டைகளைக் குவியலாக இலைப்பரப்பில் இட்டு அதை வெள்ளை நிற ரோமங்களால் மூடிவிடும். முட்டையிட்ட 2 அல்லது 3 நாட்களிலிருந்து இளம் புழுக்கள் வெளிவந்து பச்சையத்தை சுரண்டி உண்ணும். அதன்பின் குருத்து இலைகளைச் சேதப்படுத்தத் தொடங்கும். கூட்டுப்புழுக்களிலிருந்து 7 - 15 நாட்களில் தாய் அந்துபூச்சி வெளியேறி 7 - 15 நாட்கள் உயிர் வாழ்ந்து முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும். 
தாய் அந்துபூச்சிகள் இரவு நேரங்களில் செயல்படும். ஆண் பூச்சிகள் அரக்குநிற முன் இறக்கையுடன், நுனிப்பகுதியில் முக்கோண வடிவ வெள்ளைப்புள்ளிகளுடன் காணப்படும். ஆண் மற்றும் பெண் பூச்சிகள் வெள்ளைநிற பின் இறக்கைகளையும் ஓரத்தில் அரக்கு நிறமும் காணப்படும்.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு
இப்புழுக்களை ஒருங்கிணைந்த  பயிர் பாதுகாப்பு முறைகள் மூலமே முழுவதுமாகவும், பொருளாதார இழப்பு இன்றியும் கட்டுபடுத்த முடியும்.
கோடை உழவு: மே மற்றும் ஜூன் மாதங்களில் கோடை உழவு செய்வதன் மூலம் மண்ணில் உள்ள கூண்டுப்புழுக்கள் வெளிக்கொண்டு வரப்பட்டு பறவை இனங்களால் உண்ணப்பட்டும், சூரிய வெப்பத்தால் காய்ந்தும் அழிந்துவிடுகின்றன.
ஒரே நேரத்தில் விதைத்தல் :அனைத்து விவசாயிகளும் பருவத்தே ஒரே சமயத்தில் விதைப்பு செய்ய வேண்டும். பல்வேறு நிலைகளில் விதைப்பு செய்தால் வளர்ச்சி நிலையில் உள்ள மக்காசேளாப் பயிர்களில் படைப்புழுவின் தாக்குதல் அதிகமாக இருக்கும்.
விதை நேர்த்தி செய்தல் :பவேரியா பேசியான என்ற எதிர் உயிர் பூஞ்சாளத்தை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் வீதம் கலந்து விதை நேர்த்தி செய்வதன் மூலம் பூச்சி தாக்குதலைக் குறைக்கலாம்.
ஓரப்பயிர் சாகுபடி : மக்காசோளம்  விதைக்கும்போது,  அதனுடன் வயல் ஓரங்களில் தட்டைப்பயறு ஆமணக்கு சூரியகாந்தி, சாமந்திப்பூ ஆகியவற்றை பயிரிட்டு, நன்மை செய்யும் பூச்சிகளைப் பெருக்கி பூச்சித்தாக்குதலை கட்டுப்படுத்தலாம். எனவே, அனைத்து விவசாயிகளும் கண்டிப்பாக ஊடுபயிர் மற்றும் வயல் ஓரப்பயிர் சாகுபடி செய்ய வேண்டும்.
இளம் புழுக்களைக் கண்காணித்து அழித்தல்:
பயிர் விதைத்த 1 வாரம் முதல் 3 அல்லது 4 தினங்கள் இடைவெளியில் வயல் முழுவதும் நடந்து கண்காணித்து மேல்புறம் அல்லது பின்புறம் காணப்படும் முட்டைக் குவியல்கள் மற்றும இளம்புழுக் கூட்டங்களை அழிக்க வேண்டும்.
இனக்கவர்ச்சி : தாய் அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கக்கூடிய இனக்கவர்ச்சிப் பொறிகளை ஏக்கருக்கு 20 எண்கள் வீதம் வைப்பதன் மூலம், தாய் அந்துப்பூச்சிகள் கவர்ந்து கொல்லப்பட்டு இனவிருத்தி தவிர்க்கப்படும்.
வேப்ப எண்ணெய்  கரைசல் : விதைத்த  7-ம்  நாள் அசாடிராக்டின் 1 சதவீத மருந்தை ஒரு ஏக்கருக்கு 100 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பதால் தாய் அந்துப்பூச்சிகள் பயிரில் முட்டையிடுவதைத் தவிர்க்கலாம்.
பூஞ்சானம் தெளித்தல் : மெட்டாரைசியம் அனிசோபிலே என்ற பூஞ்சாளத்தை ஒரு ஹெக்டேருக்கு 4 கிலோ என்ற அளவில் விதைத்த 15 நாட்களுக்கு மேல் தெளித்தால், பூச்சிகளை பூஞ்சானம் தாக்கி அழிந்துவிடும் .
ஒட்டுண்ணிகள் வெளியிடுதல் : மக்காசோள படைப்புழுவின் முட்டைகளை அழிக்கக்கூடிய டிரைக்கோகிரம்மா பெட்டியேசம் என்ற குளவி இள ஒட்டுண்ணியை ஒரு ஹெக்டேருக்கு 5 சிசி என்ற அளவில் வெளியிட்டு, அவ்வாறு பூஞ்சாளங்கள் தாக்கிய புழுக்களைச் சேகரித்து அவற்றை அரைத்து பயிருக்குத் தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம். சாம்பல், மணல் போன்றவற்றை குருத்தில் இடுவதன் மூலமும் இப்பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
பூச்சிக்கொல்லி மருந்துகள் : இந்த வழிமுறைகளைப் பின்பற்றி கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் கடைசி வழிமுறையாக, பின்வரும் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தலாம். ஒரு லிட்டர் தண்ணீரில் ஸ்பின்னோசிட் 0.5 மிலி அல்லது எமாமெக்டின் பென்சசுயேட் 0.4 கிராம், அல்லது தயோடிகார்ப் 2 கிராம் என்ற விகிதத்தில் ஏதேனும் ஒன்றை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் அளவுக்கு காலை அல்லது மாலை வேளையில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com