விளையாட்டு விடுதியில் சேர கூடைப்பந்து வீரர்கள் தேர்வு தொடக்கம்

:தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் 2019 - 20 ஆம் ஆண்டு விளையாட்டு விடுதிக்கான கூடைப்பந்து வீரர்கள் தேர்வு புதன்கிழமை தொடங்கியது.

:தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் 2019 - 20 ஆம் ஆண்டு விளையாட்டு விடுதிக்கான கூடைப்பந்து வீரர்கள் தேர்வு புதன்கிழமை தொடங்கியது.
2019 - 20 ஆம் கல்வியாண்டில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பள்ளிகளில் 7, 8, 9, 11 ஆகிய வகுப்புகளில் பயில போகும் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏற்ப நவீன பயிற்சி,  தங்குமிட வசதி,  சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கு மாவட்ட அளவிலான விளையாட்டு விடுதி தேர்வு தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் மே 8-ம் தேதி நடைபெற்றது. இதில், 182 மாணவர்கள், 29 மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் புதன்கிழமை (மே 15) முதல் வெள்ளிக்கிழமை வரை மாநில அளவில் மாணவர்களுக்கான கூடைப்பந்து தேர்வு போட்டிகள் நடத்தப்படுகிறது. முதல் நாளான புதன்கிழமை 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவிலான தேர்வு நடைபெற்றது. இதில், தேர்வு குழுவினரான தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதுநிலை மேலாளர் பி. சாமுவேல் ராஜா டேனியல், தேனி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் கே. சுப்புராஜ் ஆகியோர் முன்னிலையில் இத்தேர்வு போட்டி நடைபெற்றது.
மாநில அளவிலான தேர்வுக்குத் தேர்வு குழு உறுப்பினர்களான தஞ்சாவூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் எம். தேன்மதி, மாவட்ட கூடைப்பந்து பயிற்றுநர்கள் ரகு குமார் (கோவை), க. சண்முகபிரியன் (தஞ்சாவூர்), ராம் பிரசாத் (திண்டுக்கல்),  கூடைப்பந்து விளையாட்டு வீரர் கே.எஸ். பாலசுப்பிரமணியன் (பி.எஸ்.என்.எல்.) ஆகியோர் இப்போட்டிகளை நடத்தினர். தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் க. பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதில், 7ஆம் வகுப்பு மாணவர்கள் 26 பேரும்,  8ஆம் வகுப்பு மாணவர்கள் 35 பேரும் என மொத்தம் 61 பேர் கலந்து கொண்டனர். வியாழக்கிழமை 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், வெள்ளிக்கிழமை 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு போட்டிகள் நடைபெறவுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com