கும்பகோணம் ரயில் நிலையத்தில் கோட்ட மேலாளர் ஆய்வு
By DIN | Published On : 18th May 2019 09:08 AM | Last Updated : 18th May 2019 09:08 AM | அ+அ அ- |

கும்பகோணம் ரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட மேலாளர் அஜய்குமார் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
ரயில் நிலையத்தின் அனைத்து பகுதிகளையும் அவர் பார்வையிட்டார். பின்னர் நிலைய அலுவலர்களிடம் ரயில்களின் இயக்கம் குறித்து கேட்டறிந்தார். இவருடன் திருச்சி ரயில்வே கோட்டத்தின் இயக்கம், வணிகம், பொறியியல் உட்பட அனைத்து பிரிவு உயர் அலுவலர்களும் வந்தனர்.
முன்னதாக சிறப்பு ஆய்வு ரயில் மூலம் கும்பகோணம் வந்த அவரை திருச்சி ரயில்வே கோட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் ஆலோசனைக் குழு உறுப்பினர் கிரி, அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்புப் பொதுச் செயலர் சத்தியநாராயணன், பெட்ரோலிய பொருட்கள் விற்பனையாளர்கள் சங்க நிர்வாகி ராஜேந்திரன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.
பின்னர், இவர்கள் இப்பகுதியின் ரயில்சேவை தொடர்பான தேவைகளை கோரிக்கை மனுவாக அவரிடம் கொடுத்தனர். மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:
கும்பகோணம் ரயில் நிலையத்தில் 2 மற்றும் 3-வது நடைமேடை விரிவாக்கப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். அப்பணிகள் நிறைவேறும் வரை அதிக பெட்டிகள் கொண்ட ரயில்களின் கிராசிங்கை கும்பகோணத்தில் தவிர்க்க வேண்டும்.
தாம்பரம் - செங்கோட்டை அந்த்யோதயா ரயிலை உடனடியாக அறிவிக்கப்பட்ட தடத்தில் இயக்க வேண்டும். சென்னை - தூத்துக்குடி இடையே முன்பு மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்ட ஜனதா விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். திருப்பதி செல்லும் ரயிலை தினமும் இயக்க வேண்டும். மயிலாடுதுறை - மைசூரு விரைவு ரயிலை நாமக்கல் வழியாக இயக்க வேண்டும்.
மயிலாடுதுறை - திருநெல்வேலி பயணிகள் ரயில் ஓராண்டாக தஞ்சாவூர் - திருச்சி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இயக்குவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கும்பகோணம் ரயில் நிலையத்தில் அனைத்து நடைமேடைகளிலும் மேற்கூரை அமைக்க வேண்டும். பாபநாசம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
கும்பகோணம் - விருதாச்சலம் புதிய ரயில் பாதை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தஞ்சாவூர் - விழுப்புரம் இடையே இரட்டை வழி ரயில் பாதை அமைக்க ரயில்வே அமைச்சகத்துக்குக் கருத்துரு அனுப்ப வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்று கொண்ட கோட்ட மேலாளர், பரிசீலனை செய்து தேவையான நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.