பூண்டியில் வைகாசி விசாக தேரோட்டம்
By DIN | Published On : 18th May 2019 09:09 AM | Last Updated : 18th May 2019 09:09 AM | அ+அ அ- |

தஞ்சாவூர் அருகேயுள்ள பூண்டியில் ஸ்ரீ புஷ்பவனேசுவரர் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
இக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் மே 10ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 10 நாள்கள் நடைபெற்ற இவ்விழாவில் சூரிய பிரபை, முத்துப்பல்லக்கு, பூத வாகனம், வெள்ளி ரிஷப வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் என பல்வேறு வாகனங்களில் சுவாமி - அம்பாள் புறப்பாடு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இத்தேரில் ஸ்ரீ புஷ்பவனாம்பிகை உடன் ஸ்ரீ புஷ்பவனேசுவரர் எழுந்தருளினார். இதையடுத்து, வீதி உலா நடைபெற்றது. சனிக்கிழமை சுவாமி பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தருளலும், ஞாயிற்றுக்கிழமை விடையாற்றியும், மே 20ஆம் தேதி மகா அபிஷேகம், சுவாமி எழுந்தருளலும் நடைபெறவுள்ளது.