மதுக்கூரில் விஞ்ஞான முறையில் மண் மாதிரி சேகரிப்பு பணி
By DIN | Published On : 18th May 2019 09:11 AM | Last Updated : 18th May 2019 09:11 AM | அ+அ அ- |

மதுக்கூர் வட்டத்தில் விஞ்ஞான முறையில் ஜிபிஎஸ் செயலி மூலம் மண்மாதிரி சேகரிப்புப் பணி நடைபெற்று வருகிறது என்றார் மதுக்கூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் திலகவதி.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
மத்திய அரசின் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின்கீழ், கடந்த 4 ஆண்டுகளில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளின் பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்து மதிப்பிடும் வகையில், ஒவ்வொரு வருவாய் கிராமங்களிலும் 3 இடங்களில் தலா 50 செ.மீ. நீளம், அகலம், ஆழம் கொண்ட குழிகள் தோண்டி விஞ்ஞான முறைப்படி ஒரு குழிக்கு 2 மண் மாதிரிகள் ஆய்வுக்காக சேகரிக்கப்படுகிறது. அத்துடன், அதே கிராமத்தில் மண்ணின் மேற்பரப்பிலிருந்து 15 செ.மீ ஆழத்தில் வெவ்வேறு இடங்களில் 10 மண்மாதிரிகளும் சேகரிக்கப்படுகிறது. கிராமங்களில் ஜிபிஎஸ் செயலி மூலம் அட்சரேகை, தீர்க்கரேகை குறியிடப்பட்டு தேர்வு செய்யப்பட்ட இடங்களில் குழிகள் தோண்டி, அங்கு சேகரிக்கப்பட்ட மண்மாதிரிகள் ஆடுதுறை மண் பரிசோதனை நிலையத்துக்கு தேவையான ஆவணங்களுடன் அனுப்பப்படவுள்ளது.
மேலும், குறிப்பிட்ட இடங்களை ஜிபிஎஸ் செயலி மூலம் கண்டறிந்து மண் மாதிரிகள் எடுக்கப்படுவதால் பரிசோதனை முடிவுகளை துல்லியமாக பெறலாம் என்பதால், இந்த முறையை கையாண்டு வேளாண்மைத் துறை அலுவலர்கள், மதுக்கூர் வட்டாரத்துக்கு உள்பட்ட 48 வருவாய் கிராமங்களிலும் மண் மாதிரி சேகரிப்பு பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.