வெறிநாய் கடித்து 7 பேர் காயம்
By DIN | Published On : 18th May 2019 09:10 AM | Last Updated : 18th May 2019 09:10 AM | அ+அ அ- |

தாராசுரத்தில் வெறிநாய் கடித்ததில் 7 பேர் காயமடைந்தனர்.
தாராசுரம் கீழத் தெருவிலுள்ள ரேஷன்கடையில் பொருள்கள் வாங்க வெள்ளிக்கிழமை 25-க்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர்.
அப்போது, அங்கு வந்த நாய் ஒன்று வரிசையில் நின்றிருந்த ஜெயலெட்சுமி(58) என்ற பெண்ணை கடித்தது. வாயில் எச்சில் வடிய நின்றிருந்த அந்த நாயை விரட்ட முயன்றபோது, ஆத்திரமடைந்த அந்த வெறிநாய் வரிசையில் நின்றிருந்த மேலும் 5 பேரை கடித்தது.
பின்னர் ஊர் மக்கள் கூச்சலிடப்படி விரட்டவே, வெறிநாய் தப்பியோடி விட்டது. வெறிநாய் கடித்த 6 பேரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றனர். இதேபோல், தாராசுரம் கீழத்தெருவை சேர்ந்த ஹேமாவதி (60) என்ற மூதாட்டி அப்பகுதியில் நடந்து வந்துகொண்டிருந்தபோது, வெறிநாய் அவரையும்
கடித்தது. பின்னர் அவரை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அந்த நாயை இளைஞர்கள் விரட்டியபோது அது அங்கிருந்து தப்பியோடிவிட்டது. இதனால், வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அனைவரும் வெறிநாய்க்கு பயந்து வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர். வெறிநாயை பிடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.