குப்பை தரம் பிரிக்கும் மையத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 20th May 2019 08:32 AM | Last Updated : 20th May 2019 08:32 AM | அ+அ அ- |

தஞ்சாவூர் எஸ்.என்.எம். ரஹ்மான் நகரில் குப்பைத் தரம் பிரிக்கும் மையத்தை எதிர்த்து ஞாயிற்றுக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 14 இடங்களில் குப்பைத் தரம் பிரிக்கும் மையம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இவற்றில் அந்தந்த பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை இம்மையத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படவுள்ளது.
இந்தத் திட்டத்துக்குச் சில இடங்களில் எதிர்ப்புத் தெரிவிக்கப்படுவதால், பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், தஞ்சாவூர் கீழவாசல் எஸ்.என்.எம். ரஹ்மான் நகரில் பூங்கா அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள இடத்தில் குப்பைத் தரம் பிரிக்கும் மையம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் என்பதால் இந்த இடத்தில் இம்மையம் அமைக்கக் கூடாது என வலியுறுத்தியும் எஸ்.என்.எம். ரஹ்மான் நகர், சம்சுல் ஆரிஃபா நகர், அப்துல்லா நகர், சிராஜூதீன் நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்கத் தலைவர் ஜபருல்லா தலைமை வகித்தார். செயலர் சுதாகர், இணைச் செயலர் நாசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.