தமிழ் வழியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசு
By DIN | Published On : 20th May 2019 08:31 AM | Last Updated : 20th May 2019 08:31 AM | அ+அ அ- |

நடப்பு 2018-2019-ம் கல்வியாண்டில் தமிழ் வழியில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி, மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு பட்டுக்கோட்டையில் தமிழர் அறம் அமைப்பு சார்பில் 5-வது ஆண்டு பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக மக்கள் கல்வி இயக்கப் பேராசிரியர் பிரபா. கல்விமணி, மாந்தநேயன் (சென்னை வினைத் தமிழ் இயக்கம்), முத்தமிழறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதம் பிள்ளையின் பேத்தி வெற்றிச்செல்வி, தமிழறிஞர் சா. பன்னீர்செல்வம், அம்பத்தூர் தாய்த்தமிழ் பள்ளித் தாளாளர் செந்தமிழ்வாணன் ஆகியோர் பங்கேற்று தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கிப் பாராட்டினர். இவர்கள் பேசுகையில் தமிழ் வழிக் கல்வியின் அவசியத்தை விளக்கினர். தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கு அரசு 100 சதவீத வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
விழாவில், 12-ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர். மகாலெட்சுமிக்கு ரூ.5000-ஐ வெற்றிச்செல்வியும், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சகானாவுக்கு ரூ.4000-ஐ சா. பன்னீர்செல்வமும், 10-ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற தம்பிக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி இரா. அட்சயாவுக்கு ரூ.4000-ஐ மாந்தநேயனும், மதுக்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி நா.காவியாவுக்கு ரூ.3000-ஐ செந்தமிழ்வாணனும் வழங்கினர்.
அடுத்து, தமிழ்நாட்டில் முதன்முதலாக தொடங்கப்பட்ட அம்பத்தூர் தாய்த்தமிழ் தொடக்கப் பள்ளிக்கு ரூ. 5000 நிதியை பேராசிரியர் பிரபா. கல்விமணி வழங்க, அதை செந்தமிழ்வாணன் பெற்றுக்கொண்டார். இதேபோல, பட்டுக்கோட்டை தாய்த்தமிழ்பள்ளிக்கு பேராசிரியர் பிரபா. கல்விமணி அதன் பொறுப்பாளரிடம் ரூ.5000 வழங்கினார். தாய்த்தமிழ் கல்வி அறக்கட்டளைத் தலைவர் பேராசிரியர் பிரபா.கல்விமணியின் சேவையைப் பாராட்டி அவரிடம் ரூ.5000-ஐ உலக தமிழ்க்கழக துணைத் தலைவர் அறிவுறுவோன் வழங்கினார்.
விழாவுக்கு தமிழர் அறம் அமைப்பின் நிறுவனர்-தலைவர் சி. ராமசாமி தலைமை வகித்தார். மாசிலா. சுகுமார் முன்னிலை வகித்தார். கம்பன் பேரவை ஒருங்கிணப்பாளர் எ.சு.கே. கவி வரவேற்றார். வழக்குரைஞர் சு. செந்தமிழ்ச்செல்வன் நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தார். நிறைவாக ரவி நன்றிகூறினார்.