பேராவூரணியில் வெள்ளரி பழங்கள் அமோக விற்பனை
By DIN | Published On : 23rd May 2019 08:27 AM | Last Updated : 23rd May 2019 08:27 AM | அ+அ அ- |

பேராவூரணி பகுதியில் கடும் வெயிலுக்கு இதமாக உடலுக்கு குளிர்ச்சியும், புத்துணர்வும் தரக்கூடிய வெள்ளரிப்பழம் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
பேராவூரணி ரயில் நிலையம் அருகே ஏராளமானோர் பேருந்துக்காக காத்திருந்து செல்வது வழக்கம். இங்கு சாலையோரத்தில் பழக்கடைகள், பூக்கடைகள், காய்கறிக் கடைகள் உள்ளன.
தற்போது கோடையின் தாக்கம் கடுமையாக உள்ளது. அக்னி நட்சத்திர காலமாக இருப்பதால், கடும் வெயில் காரணமாக, பொதுமக்கள் வெளியே தலைகாட்டாமல் முடங்கிக் கிடக்கின்றனர். பேராவூரணி பகுதியில் கஜா புயலால் ஆயிரக்கணக்கான நிழல் தரும் மரங்கள், பலன் தரும் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.
இதனால், இந்தப் பகுதியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடும் வெப்பக்காற்று வீசுகிறது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் 104 டிகிரியைத் தாண்டி வெப்பநிலை உள்ளது. ஆறு, ஏரிகளும் வறட்சியின் காரணமாக காய்ந்து கிடக்கின்றன.
இதனால் கோடை வெயிலின் உக்கிரத்தை தணிக்கும் வகையில் தர்பூசணி பழங்கள், வெள்ளரி பழங்கள், பனை நுங்கு, இளநீர் ஜூஸ், சர்பத் போன்றவற்றை உண்டு பொதுமக்கள் தாகத்தை தணித்து கொள்கின்றனர்.
உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு விலை குறைவாக உள்ள வெள்ளரிக்காய், வெள்ளரிப்பழங்களை பொதுமக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். வெள்ளரிக்காய் கூறு ஒன்று ரூ.10, ரூ. 20-க்கும் , வெள்ளரிப்பழம் அளவிற்கு தகுந்தாற் போல ரூ. 30 முதல் ரூ. 70 வரை விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளரிப்பழத்தை வாங்கிச் செல்பவர்கள், அத்துடன் நாட்டுச் சர்க்கரை தொட்டு சாப்பிடுகின்றனர். சிலர் சர்க்கரை அல்லது ஜீனி கலந்து மிக்ஸியில் அடித்து, ஐஸ் கலந்து பழரசமாகவும் பருகுகின்றனர்.
உடலுக்கு குளிர்ச்சியும், நல்ல ஜீரண சக்தியையும் தரும் வெள்ளரிப்பழம் விற்பனை கோடைகாலத்தில் களைகட்டி உள்ளது.